பரசுராமப் படலம் - 1366
இராமனிடம் பரசுராமன் கூறியது
பரசுராமன் சினவுரை
1366.
‘இற்று ஓடிய சிலையின் திறம்
அறிவென்; இனி. யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை
புரிவான் நசை உடையேன்;
செற்று ஓடிய திரள் தோள் உறு
தினவும் சிறிது உடையேன்;
மற்று ஓர் பொருள் இலை; இங்கு இது
என் வரவு’ என்றனன் உரவோன்.
யான். இற்று ஓடிய சிலையின் திறம் அறிவென்-நான். (முன்னமே
நீ) முறித்து ஒழித்த வில்லின் திறத்தை (அது முன்பே முறிந்திருந்தது
என்பதை) அறிவேன்; இனி உன் பொன் தோள்வலி நிலை -
இப்பொழுது நான் உன்னுடைய அழகிய தோள் வலிமையின்
நிலையை; சோதனை புரிவான் நசை உடையேன் - சோதித்து அறிய
விருப்பம் சிறிது உடையேன்; செற்று - (அரசர்களை) அழித்து; ஓடிய
- மேம்பட்ட; திரள் தோள் உறு தினவும் - திரண்ட தோள்களில்
பொருந்தின தினவும் சிறிது எனக்கு உண்டு; இங்கு இது என் வரவு
மற்று ஓர் பொருள் இ(ல்)லை - இங்கு எனது வருகைக்குக் காரணம்
இதுவே வேறு ஒரு காரணமும் இல்லை என்று; உரவோன் என்றனன் -
வலிமை மிக்க பரசுராமன் கூறினான்.
சிவ பெருமான் வில் முன்பே முறிந்தவில்;அதனை முறித்ததற்காகக்
கர்வங் கொள்ளாதே எனக் குற்றம்கூறும் பரசுராமன் தான்
மிகப்பெருங் கர்வத்தோடு பேசுகிறான்; கர்வங் கொள்பவர் தன் குற்றம்
அறியார் என்பது குறித்தார். புரிவான் - பொருட்டுப்பொருளில் வந்த
வினையெச்சம். உன் தோள் வலிவைச் சோதனையிடவும். என் தோள்
தினவைச் சிறிது அடக்கிக் கொள்ளவும் ஆகிய இரு
செயல்களுக்காகவே இங்கு வந்தேன்; வேறோர் காரியமில்லை
என்கிறான் பரசுராமன். 18
