பரசுராமப் படலம் - 1367

bookmark

தயரதன் அபயம் வேண்டுதல் ((1367-1371))

பரசுராமனிடம் தயரதன் அபயம் வேண்டல்
 
1367.    

அவன் அன்னது பகரும்
   அளவையின். மன்னவன் அயர்வான்.
‘புவனம் முழுவதும் வென்று. ஒரு
   முனிவற்கு அருள்புரிவாய்!
சிவனும். அயன். அரியும் அலர்;
   சிறு மானிடர் பொருளோ?
இவனும். எனது உயிரும். உனது
   அபயம். இனி’ என்றான்.
 
அவன்    - அந்தப்  பரசுராமன்; அன்னது - அவ்வாறு;  பகரும்
அளவையின்  - கூறியபொழுதில்; மன்னவன் - தயரதச்  சக்கரவர்த்தி;
அயர்வான் -  மனந்  தளர்வானாய்;  புவனம் முழுவதும் வென்று -
‘உலகாளும்  மன்னர்கள்  அனைவரையும்  வென்று;  ஒரு  முனிவற்கு
அருள்புரிவாய்  -  ஒப்பற்ற  முனிவனாகிய காசியபனுக்குத்  தானமாக
அருளியவனே!;  சிவனும்  அயன்.  அரியும் அலர் - சிவன். பிரமன்.
திருமால்  ஆகிய  மூவரும்  (உனக்கு  ஒரு  பொருள்)  அல்லர்;  சிறு
மானிடர்  பொருளோ?   - இச்சிறிய   மானிடர்கள்   உனக்கு   ஒரு
பொருள் ஆவரோ? (ஆகார்);  ‘இனி இவனும் எனது உயிரும் உனது
அபயம்’   என்றான்    -   ‘இப்போது.   (என்   மகனாகிய)  இந்த
இராமனும்.   என்னுடைய  உயிரும்  உனது அடைக்கலப்  பொருள்கள்’
(காத்தருள்) என்றான்.

வீரத்தால் வென்ற  உலகம் முழுவதையும் தானமாகக்  கொடுத்திட்ட.
நீ.    இப்போது   எங்கள்   உயிர்கள்    இரண்டையும்    தானமாகத்
தந்தருளவேண்டும்   என   தசரதன்   வேண்டினான்.   அயர்வான்  -
முற்றெச்சம்.                                                19