பதிமூன்றாம் அத்யாயம்
( கவிழ்ப்பு, சதியாலோசனை , உளவுத்துறை , மற்றும் கௌடிலயரின் அயல்நாட்டுக் கொள்கை) கவிழ்ப்பு, சதியாலோசனை
ஒரு புத்திசாலியான அரசன் தனது மக்களை ( முக்கிய அதிகாரிகளை மட்டும் இன்றி சாதாரண மக்களையும் கூட ) எதிரியின் சதித் திட்டங்களில் இருந்து காப்பான். கோபம், அச்சம், பேராசை , கர்வம் ஆகிய குணங்களை உடைய அரசனை ஒரு விரோதி எளிதாக வெற்றி கொள்வான் ( இது சாதாரண மக்களுக்கும் கூட பொருந்தும்) .
அப்பொழுது ஒரு அரசன் என்ன செய்யவேண்டும் தெரியுமா ? கௌடில்யர் சொல்கிறார் , மன்னன் தனது நாட்டிலுள்ள சோதிடர்கள், தீயச் சக்திகளை ஆராதிப்பவர்கள் போன்றோர் தங்களுக்குள் தொடர்பு கொள்வதையும் கூட கண்காணிக்க வேண்டும். காரணம் இவர்கள் யாவருமே சதி ஆலோசனைக்குக் கருவிகளாக பயன்படுபவர்கள் தான். இது தவிர, எதிரி நாட்டில் எளிதில் கவிழ்க்கப் படக் கூடியவர்களை பரிசு மற்றும் புகழ்ச்சியின் மூலமாகக் கவிழ்க்கலாம்.
எதிரியின் நாட்டில் எளிதில் அசைந்து கொடுக்காதவர்களைக் கூட (அங்கு ) கருத்து வேறுபாட்டை விதைப்பதன் மூலமாக ( அவர்களுக்கிடையில் ) குழப்பங்களை ஏற்படுத்தலாம். இந்த விஷயத்தில் எதிரி நாட்டு அரசனின் குறைகளை சுட்டிக் காட்டுவது பலனளிக்கும். இதனை முக்கிய உளவாளிகளை எதிரி நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் சாதிக்கலாம்.
மேலும், இதற்கு எதிரி நாட்டில் நாசவேலையை செய்யும் இலக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு, முதலில் அந்நாட்டு அரசனிடன் கோபம் கொள்ளக் கூடியவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பொதுவாக, கீழே கொடுக்கப்பட்டுள்ள வகையினர் மூலமாக எளிதில் நமக்கு வேண்டாத அரசனை கவிழ்க்கலாம். அப்பட்டியல் பின்வருமாறு
1.வாக்களிக்கப்பட்ட வெகுமதி கிடைக்கப் பெறாதவர்.
2.சவாலில் தோற்று அவமானப்படுத்தப்பட்டவர்.
3.நாடு கடத்தப்பட்டதால் மகிழ்ச்சி அற்று இருப்பவர்.
4.அரசனுக்காக செலவு செய்து எவ்வித லாபமும் பெறாதவர்.
5.பதவி நீக்கம் அல்லது பதவிக் குறைப்பு செய்யப்பட அரசுப் பணியாளர்.
6.தனது வேலையே வாரிசுக்குப் பெற்றுத் தர இயலாதவர்.
7.தவறான நடவடிக்கைக்காக தண்டிக்கப்பட்டவர்.
8.சொத்துக்கள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட ஒருவர்.
9.அடிமைத்தனத்தில் அவதியுறுபவர் .
10.நாடு கடத்தப்பட்ட ஒருவரின் நெருங்கிய உறவினர்.
11.வறுமையில் வாடும் பேராசைக்காரர் .
12.எப்பொழுதும் குற்றம் அல்லது தவறு செய்யும் ஒருவர்.
13.தம்முடைய குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உள்ளவர்.
14.படைகளால் ஒடுக்கப்பட்ட கலகக்காரர்.
15.தவறான வழிகளில் பணம் சேர்த்த அரசு ஊழியர்.
16.அரசனால் வெறுக்கப்பட்ட அல்லது அரசனை வெறுக்கும் ஒருவர்.
போலித் தற்பெருமை, மிகுந்த உணர்ச்சி வேகம், விளைவுகளை எண்ணாது கண் மூடித்தனமாய் காரியம் செய்பவர்கள்.
ஆகிய மேற்கண்டவர்கள் ஒரு அரசின் அழிவுக்கக்காக எப்பொழுதும் காத்து இருப்பவர்கள். இவர்கள் தான் ( எதிரி நாட்டில் ) குழப்பங்களை ஏற்படுத்த பயன் படும் துருப்புச் சீட்டுகள் என்றவிதமாக கௌடில்யர் மேற்கண்டவர்களை சித்தரிக்கிறார்.
கவிழ்ப்பையும், நாசவேலையையும் ஏற்படுத்தும் விதம்
தங்கள் சூழ்ச்சி வலையில் எளிதாய் விளக் கூடியவர்களை மாறுவேடமிட்ட உளவாளிகள் கவிழ்க்கலாம். குறி வைத்து கவிழ்க்கப்பட்ட ஒருவர் அவ்வரசனுக்காகப் பணியாற்ற ஒப்புக் கொள்வாரெனில் ஒப்பந்த சாசனத்தில் கையெழுத்திடப் பெறும். பிறகு அந்த நபர் தமது திறமைக்கு ஏற்றவாறு அரசனின் ஒற்றர்களோடு சேர்ந்து பணியாற்றுவார்.
உளவுத்துறை
அரசன் தன்னுடைய ஊழியர்களின் நேர்மையைப் பலவிதமாய் சோதித்தறிவான் . அதற்காக ஓர் இரகசிய அமைப்பையும் அவன் ஏற்படுத்தி இருப்பான். அந்த அமைப்பில் :
1.ஓரிடத்தில் நிலையாய் இருக்கும் உளவாளிகள்( இதில் உழவுத் துறை அதிகாரிகள், துறவி வேடமணிந்த ஒற்றர்கள், சம்சாரிகள், வியாபாரிகள் போன்றோர் இருப்பார்கள் .)
2.சுற்றித் திரியும் உளவாளிகள் : இரகசிய செயலாளர், அரசியல் காரணங்களுக்காய் கொலை செய்பவர், பிச்சைக்காரியாகக் கூடப் பெண் உளவாளிகள் இந்த வகையினரில் இருப்பார்கள்.)
உளவு வேலைக்காக ஓரிடத்தில் நிலை கொள்ளும் உளவாளிகள்
அரசுப் பணியாளர்களின் நேர்மையைச் சோதித்து உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் அரசன் அதற்க்கென்று உளவாளிகளைக் குறிப்பிட்ட நிலையில் நிறுத்தி வைத்து இருப்பான். அவர்களுக்கு உரிய கவுரவமும், வெகுமதிகளும் வழங்குவான். அவர்களில் யாரேனும் அரசனுக்கு எதிராய் செயல்பட்டால் அவர்கள் ஓசைப் படாமல் நிரந்தரமாக அகற்றப்படுவார்கள் .
உளவுத்துறை அதிகாரிகள்
துணிவும், புத்திக் கூர்மையும் உடைய மாணவனுக்கு உளவுத்துறை அதிகாரிக்கான பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பிறகு அரசனுக்கும் , அமைச்சருக்கும் விசுவாசமாக இருப்பதாக பிரமாணம் , செய்ய வேண்டும். பிறகு அவனுக்குப் பணமும், பட்டங்களும் தந்து , அரசனுக்கெதிராய் ஏதேனும் நடந்தால் அது பற்றிய தகவல்களை சேகரித்து தெரிவிக்கும் படி உத்தரவிட்டு அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு நேர்மையும், அறிவாற்றலும் கொண்டவர்களை ( தேர்ந்தெடுத்து ) கீழ்க்கண்ட வகையில் வேடமிட்டு ஒற்றறிய நியமிப்பார்கள்.
வணிகர் : ஏழ்மை நிலையில் உள்ள வியாபாரி ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனின் விசுவாசத்தை சோதித்து அறிந்த பிறகு அவனுக்குப் போதுமான செல்வங்களைத் தந்து அவனை இரகசிய ஒற்றனாக ( விசுவாச பிரமானத்திர்க்குப் பின்) நியமிப்பார்கள்.
குடும்பத் தலைவர் : மிகவும் தரித்திர நிலையில் உள்ள விவசாயி ஒருவனின் நேர்மையை சோதித்து பிற்பாடு அவனை ஒற்றனாக நியமிப்பார்கள்.
துறவி : தனது பணியைத் துறந்து ஒற்றராய் நியமிக்கப்பட்ட பின் மீண்டும் துறவி போலவே நடித்தல்.
ஒற்றனாகச் செயல்படும் துறவிகளின் செயல்பாடுகள் நம்பத்தக்க ஒரு துறவி பணம் ஈட்ட விரும்புவாரெனில் நகருக்கு அருகில் உளவாளியாய் நியமிக்கப்படுவார். தனது தலை முடியை மழித்துக் கொண்டோ அல்லது சடையாய் திரித்துக் கொண்டோ துறவி வேடத்தில் இருப்பார். அவரோடு சிடர் வேடத்திலும் சில ஒற்றர்கள் இருப்பார்கள். அந்தத் துறவி மக்கள் நடுவே அமர்ந்து மாதத்தில் ஓரிரு முறை மட்டுமே ஒரு பிடி பார்லி தானியத்தை உண்பது போல நடிப்பார். ( ஆனால் மறைவாக தாம் விரும்பியதை எல்லாம் அவர் தின்று தீர்க்கலாம்).
வியாபாரி போர்வையில் இருக்கும் உளவாளிகள் அவரை வணங்கிச் செல்ல வருவார்கள். அவருடைய மறைவியல் சக்திகளைக் கொண்டு தங்களுக்கு வளமும், செல்வமும் வழங்கும் படி வேண்டுவார்கள். மறுபுறம், துறவியின் சீடர்களாய் நடிப்பவர்கள் அவரைக் காண வருபவர்கள் பற்றிய தகவல்களை முன் கூட்டியே அறிந்து கொண்டிருப்பார்கள். அவருடன் மக்கள் வந்து செல்வத்துக்காகப் பிரார்த்திக்கும் பொழுது அவர் கைரேகை போன்ற யுக்திகளைக் கொண்டு அவர்களுக்கு வரவிருக்கும் செல்வங்களை பற்றிக் ( ஏதோ ஞானதிருஷ்டியில் கண்டது போல ) கூறுவார் .
எதிர்பாராத லாபம், திருட்டுப் போதல், அயல் நாட்டில் இருந்து தகவல், வெகுமதி, சமீபத்தில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகள் போன்றவற்றை அவர் முன்னறிவிப்பு செய்வார். அவருடன் மறைமுகமாய் செயல்படும் மற்ற உளவாளி சீடர்கள் அவர் ( துறவி வேடத்தில் இருக்கும் அந்த உளவாளி ) சொல்லியபடி உண்மையாகாவே நடக்கச் செய்து விடுவார்கள். துறவி ( தலைமை உளவாளி) தம்மை வணங்க வரும் பக்தர்களில் துடிப்பு , அறிவாற்றல் , பேச்சுத் திறன் உள்ளவர்களை அடையாளம் கண்டு அரசுப் பணிக்குப் பரிந்துரை செய்வார்.
இரகசிய உளவாளிகலாகப் பயன்படும் சுற்றித் திரியும் உளவாளிகள்
அரசால் பாராமரிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள அனாதைகள் இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவர்களுக்கு சமிக்ஞைகளை , மற்றும் குறிகளைப் புரிந்து கொள்ளுதல், மந்திரம், வித்தைகள், கைரேகை பார்த்தல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படும். அத்துடன் தேகவியலும், சமூகவியலும் அவர்களுக்கு கற்பிக்கப்படும். மேற்கண்ட திறமைகளைக் கொண்டு தாங்கள் ஜீவனம் நடத்துவதாகக் காட்டிக் கொண்டபடி உளவு பார்ப்பார்கள்.
படுகொலை செய்பவர்
நாட்டிலேயே அதிக துணிச்சல் கொண்டவர்களில் இருந்து , பணத்துக்காக யானை, புலிகளுடன் சண்டை இடத் தயாராய் இருப்பவர்களையும் தங்களது பாதுகாப்பையே துச்சமாகக் கருதுபவர்களையும் இப்பணிக்கு தேர்வு செய்வார்கள்.
விஷம் இட்டுக் கொலை செய்பவர்கள்
யாரிடமும் ( உறவினர்கள் உட்பட ) பிரியம் வைக்காத குரூரச் சிந்தனை உள்ள கொடுமையாளர்களை இப்பணிக்காக ( அரசாங்கம் பிரத்யேகமாக ) தேர்ந்தெடுக்கும் படி கௌடில்யர் அறிவுறுத்திகின்றார் .
சுற்றித் திரியும் பெண் துறவிகள்
வறுமை நிலையில் உள்ள அதே சமயம் துணிச்சல் மிக்க விதவைகள் இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தங்கள் வாழ்க்கைப் பாட்டுக்காக எதேனும் செய்தாக வேண்டிய அவசியம் அவர்களுக்கு. அவர்கள் அரண்மனையில் உயரதிகாரிகளின் வீடுகளுக்கு எளிதில் சதந்திரமாய் சென்று வர வேண்டும். அப்படிச் செல்லும் பொழுது அந்த உயர் அதிகாரிகள் உண்மையான விசுவாசத்துடன் தான் நடக்கின்றார்களா என்பதை கண்காணித்து உடனுக்குடன் செய்திகளை அரசருக்கு தெரிவிப்பார்கள். அப்படி அந்த அதிகாரிகளின் விசுவாசத்தில் குறைகள் ஏதேனும் இருப்பினும் அவர்களும் ஓசைப்படாமல் அகற்றப்படுவார்கள் .
செய்தி அனுப்புதல்
சுற்றித் திரியும் உளவாளிகளால் அனுப்பப்படும் செய்திகள் ஓரிடத்தில் நிலையாயிருக்கும் உளவாளிகளுக்கு சங்கேத பாஷையில் தெரிவிக்கப்படும். செய்திகளைக் கொண்டு செல்பவர்களுக்கு அவற்றைச் சேகரித்தவர் யார் என்று தெரியாது. சில சமயம் செய்திகளை அனுப்புவது இயலாத காரியமாகிவிடும். அந்நிலையில் செய்திகளை பாட்டு, பேச்சு அல்லது சமிக்யைகளில் மறைமுகமாய் தெரிவிக்கலாம்.
இரகசிய உளவாளிகளின் பணி:
1.ஓர் அரசனின் தயவில் வாழ்ந்து கொண்டு மற்றோர் அரசனுக்காகப் பணியாற்றி துரோகம் செய்யும் உயர் அதிகாரிகளை அடையாளம் காணுதல்.
2.பகைவனின் தூண்டுதலுக்கு எளிதில் இரையாகக் கூடிய நாட்டு மக்களைக் கண்காணிப்பில் வைத்திருப்பது.
3.பகைவனுக்கெதிறாய் உளவியல் சாந்த போர் நடத்துதல்.
4.எதிரியைப் பலவீனமாக்குதல்.
மக்களைக் கண்காணிக்கும் விதம் பற்றி அர்த்தசாஸ்திரம் கூறும் விஷயங்கள்:
1.மக்களிடையே நிலவும் அதிருப்த்தியைக் கண்டறிவதற்காக அவர்கள் ( மக்கள் ) கண்காணிக்கப்படுவர். இரகசிய உளவாளிகள் இருவர் தமக்குள் அரசனைப் பற்றி பொது இடங்களில் விவாதிப்பார்கள். சிறிது கூட்டம் கூடிய நேரத்தில் உளவாளிகளுக்குள் ஒருவர் அரசனுக்கு ஆதரவாயும் மற்றொருவர் மன்னரின் எதிரி போலவும் பேசுவார்கள் . மக்கள் பிரதிபலிக்கும் கருத்துக்களில் இருந்து அரசருக்கு ஆதரவானவர்கள் யார், எதிரானவர்கள் யார் என்பது கண்டறியப்படும். அதுபோல, மக்களிடையே உலவும் வதந்திகளையும் உளவாளிகள் கண்டறிவார்கள்.
2.துறவி வேடமிட்ட உளவாளிகளுக்கு விவசாயிகள், கால்நடை மேய்ப்பவர்கள், வியாபாரிகள், துறைத் தலைவர்களின் நேர்மை பற்றியும் ( நேர்மை இன்மை பற்றியும் ) அமைச்சருக்குத் தெரிவிக்கும் பொறுப்பு உண்டு. ஊதாரித்தனமாய் செலவு செய்பவர்களையும் , முறையான வருமானம் ஏதுமின்றி கேளிக்கைகளில் பணத்தைச் செலவிடுபவர்களையும் தீவிரமாய் கண்காணிப்பது அவசியம்.
கௌடிலயரின் அயல்நாட்டுக் கொள்கை:
1.ஓர் அரசன் கீழ்க்கண்ட காரியங்களில் உறுதியுடன் இருந்தான் எனில் அவன் சாம்ராஜ்யங்களைப் படைப்பான்.
2.ஓர் அரசன் தனது நாட்டின் வளங்கள் மற்றும் ஆற்றலை விரிவுபடுத்தவேண்டும் .
3.எதிரிகள் அழிக்கப்பட வேண்டும்.
4.உதவி செய்யும் அண்டை நாட்டு அரசர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
5.அந்த அரசன் விவேகமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.
6.போரைக் காட்டிலும் அமைதியே விரும்பப்பட வேண்டும்.
7.வெற்றியிலும் தோல்வியிலும் நியாயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஓர் அரசனின் அண்டை அயலார்களில் மிகவும் முக்கியமானவர்கள் எதிரிகளே. பேரரசைச் சுற்றியமைந்த நாடுகளில் எதிரி நாடு என்று ஒன்றும் இருக்கும். அந்த எதிரி நாடே பேரரசை எதிர்க்கவும் , அவ்வரசைத் தாக்கவும் தயாராகும். அரசனுக்கும் பகைவருக்கும் இடையில் நடுநிலையான சிறு நாடுகளும் உண்டு. பேரரசின் முக்கிய குறிக்கோள் இயற்கையான எதிரியை வீழ்த்துவதே ஆகும்.
பகை வலுக்கும் நிலையில் கூட்டணி என்பது இன்றியமையாதது. கூட்டணி - ஒரு நாட்டை உருவாக்குவதில் அங்கம் வகிக்கும். " நட்பின் உண்மையான பண்பு உதவி செய்தலே " நண்பன் என்பவன் எப்பொழுதும் நலம் விரும்பியாகவே திகழ வேண்டும். எனவே உதவி செய்பவன் முன்பு எதிரியாயிருந்தாலும் கூட்டணி அமைக்க உகந்தவனாவான். மாறாக, ஒப்பந்தத்தை மீறி எதிரியோடு சென்று சேர்ந்து மீண்டும் கூட்டணி அமைக்க வரும் அரசன் நண்பனாயிருப்பினும் கவனத்துடனேயே கையாளப்பட வேண்டும். " பாம்புடன் வாழ்வது நிரந்தர பயத்துடன் வாழ்வதாகும். அதுபோல, எதிரியிடம் இருந்து வந்து சேர்ந்த ஒருவனும் அபாயமானவனே" என்கிறார் கௌடில்யர் . அதுபோல, போரைக் காட்டிலும் அமைதிக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். காரணம், போரில் படைகளின் இழப்பு , செலவு, வீட்டாரின் பிரிவு போன்ற நன்மையற்ற நிகழ்வுகள் உண்டு. நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் உயர்ந்தவர் , தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இன்றி நன்மைகளை ஏற்படுத்துமெனில் போரைக் காட்டிலும் சமாதானமே சிறந்தது. மாறாக, நன்மைகள் நியாயமற்ற முறையில் பங்கிடப்படும் வேலையில் போரே சரியானதாகும். ஓர் அரசனுக்கும் அவன் எதிரிக்கும் இடையேயான பலப்பரீட்சையில் இருவரும் முன்னேறினாலும், அழிந்தாலும், சமமாய்த் திகழ்ந்தாலும் அமைதியை மேற்கொள்வதே சரியாகும். பலம்மிக்க அரசர், சமமான அரசர் , மற்றும் பலம் குறைந்த அரசர்களில் முதல் இருவகையினருக்குமிடையே சமாதானமும் பலமற்றவருடன் போரும் மேற்கொள்வதே சிறந்தது. நியாயமான ஒரு அரசன் தனது கூட்டணியினருக்கு உரித்தான உடைமைகளை எடுத்துக் கொள்ளாமல் அவர்களிடம் நியாயத்துடன் செயல்படுவான். ஒப்பந்தம் இட்டு அமைதி வழியில் செயல்படுவதால் , ஒரு அரசனுக்கு இரு நன்மைகள் உண்டு. ஒருவேளை கூட்டணி அரசன் நல்லவன் எனில் , அமைதி உடன்படிக்கையின் மூலம் ஓர் அரசன் தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் .
( அல்லது )
ஒருவேளை கூட்டணி அரசன் நல்லவன் இல்லை எனில், தகுந்த பிணையைத் தந்து அமைதியைப் பெரும் அரசன் தனக்கு அனுகூலமான வாய்ப்பு கிடைக்கும் வரைக் காத்து இருக்கலாம். பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தாக்கலாம்.
போரைப் பற்றி கௌடில்யர்
ஓர் அரசனுக்கு இரு பெரும் பொறுப்புகள் உண்டு. ஒன்று - நாட்டை அன்னியர் படையெடுப்பில் இருந்து காப்பாற்றுவது. மற்றொன்று - வெற்றியின் மூலம் நாட்டின் எல்லையை விரிவுபடுத்துவது. நாட்டின் பாதுகாப்பு என்பது நிலபரப்பை ( எல்லையை ) ப் பாதுகாத்தல் மட்டுமன்று. துரோகிகள், புரட்சிக்காரர்கள் , குழப்பவாதிகள் ஆகியோரைத் தடுப்பதாகும்.
எல்லைப் பாதுகாப்பு என்பது வேற்று நாட்டவர் உள்ளே புகுந்து விடாதவாறு அரண் மற்றும் கோட்டைகளை அமைத்தல் ஆகும். கோட்டைகள் - மலை, நதி, காடு மற்றும் பாலைவனக் கோட்டைகள் என நான்கு வகைப் படும். அரசன் தனது படையை பல்வேறு வழிகளில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இராணுவத் தலைமை அதிகாரிகள் எதிரியின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காதவாறு சிறந்த ஊதியம் அளிக்கப்பட வேண்டும். கோழைகளை வேரறுக்க படைகளின் நேர்மை சோதிக்கப்பட வேண்டும். இரகசிய உளவாளிகள் மூலம் அவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். எதிரிகளின் வலையில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நால்வகைப் படைகளும் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளின் கீழ் இயங்கும் . ஒரே அதிகாரி என்றால் அவர்கள் துரோகம் செய்யவும் வாய்ப்பு உண்டு, அல்லது தன் கையில் தான் எல்லாம் என்ற ஆணவத்தில் மன்னனுக்கே சவால் விடலாம் . அதுவே , ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகள் என்றால் , அவர்கள் ஒருவர் மற்றவர் மீது சந்தேகமும் பயமும் கொண்டு விசுவாசத்துடன் செயலாற்றுவர். அரசின் வரவு - செலவுக் கணக்குகளில் சேமிப்பு ஏற்பட, போரல்லாத அமைதிக் காலங்களில் போதிய படைகளைப் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு எஞ்சியவற்றைக் கலைத்து விடலாம் .
பாதுகாப்புப் படையினர் கோட்டைகள் மற்றும் அரசாங்க சொத்துக்களைப் பாதுகாப்பர். அப்படைகளை வழிநடத்தும் அதிகாரிகள் நிரந்தரப் பணியில் இருப்பர். ஆனால், அடிக்கடி இடமாற்றம் பெறுவர். கலைக்கப்படாத மற்றொரு சிறப்பு வகைப்படி அரசனின் மெய்க் காவலர் படை . வெற்றிக்குப் பிறகு கலைக்கப்படும் படையினர் தேவைப்படும் போது மீண்டும் ஒன்று திரட்ட எதுவாய் நாட்டின் உள்ளே பரவி இருக்குமாறு வைக்கப்படுவர். ஆனால் இதை எல்லாவற்றையும் விட , ஒரு புத்திசாலி அரசன் தனது அண்டை நாட்டு எதிரி அரசர்களில் ஒருவரை மற்றொருவருடன் போரிடச் செய்து அவர்களை ஒன்று சேர விடாமல் பார்த்துக் கொள்வான்.
