பகுதி 9
முதல் சந்திப்புக்கு நாலு நாளைக்குப் பிறகு ஒரு நாள் சந்திரசூடன் மிஸ். மனோன்மணியைப் பார்க்கச் சென்றான்.
"இந்தப் பக்கம் அப்புறம் நீங்கள் வரவேயில்லையே! ராஜ்மோகன் கூட 'சமத்து மாமா'வைப் பற்றி இரண்டு மூன்று தடவை கேட்டு விட்டான்!" என்றாள் மனோன்மணி.
"மிஸ்டர் மனோகர் ஏதாவது தப்பாக எண்ணிக் கொள்ளப் போகிறாரே என்று நான் வரவில்லை. அன்றைக்கே நான் இங்கே வந்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது."
"மனோகருக்குப் பிடிக்கவில்லையென்பது ஒரு காரணமா?...இருக்கலாம்; நான் என்ன கண்டேன்? அவருடன் ரொம்ப சிநேகமாகிவிட்டீர்கள் போலிருக்கிறது. அவர் வீட்டுக்கு அடிக்கடி போகிறீர்களாமே!"
"ஆமாம், தினமும் நாங்கள் மலைமேல் வேட்டையாடப் போகிறோம். போகும் போதும் திரும்பும் போதும் அவர் வீட்டுக்குப் போகிறேன்."
"அவருடைய அப்பா அம்மாவைப் பார்த்தீர்களா?"
"ஓ! பார்த்தேன். தினமும் பார்க்கிறேன்; பேசுகிறேன். ரொம்ப நல்ல மனிதர்கள். மகன் விஷயத்திலே மட்டும் பண்ணையார் மோசமாக நடந்து விட்டார். அதற்காக இப்போது கிழவரின் மனத்தில் கொஞ்சம் பச்சாதாபம் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது..."
"அப்படியா? சொன்னாரா, என்ன?"
"வாய் விட்டுச் சொல்லவில்லை. பேச்சுப் போக்கில் தெரிகிறது. அவருடைய சொத்துக்களை உயில் எழுதி வைப்பது பற்றி இப்போது ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்."
"பண்ணையாரை நான் ஒரு தடவை பார்க்க வேண்டும். நான் வேலை பார்க்கும் பள்ளிக் கூடத்துக்கு அவர் ஒரு டிரஸ்டி. பள்ளிக்கூடத்தின் அபிவிருத்தி பற்றி அவரிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இந்த வீட்டில் சில 'ரிப்பேர்'கள் அவசியமாயிருக்கின்றன. தாங்கள் ஒரு தடவை என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துப் போய் அறிமுகம் செய்து வைக்க முடியுமா?" என்று மனோன்மணி ஆவலுடன் கேட்டாள்.
"புதிய மனிதனாகிய என்னிடம் கேட்கிறீர்களே; மனோகரிடம் சொன்னால் உடனே காரியம் ஆகிவிடுமே?" என்றான் சந்திரசூடன்.
"அவரிடம் பல தடவை சொல்லியாகிவிட்டது. 'ஆகட்டும்' 'ஆகட்டும்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர, அழைத்துப் போகவில்லை."
"இப்படி இரண்டுங் கெட்டானாக உங்களை அழைத்துப் போகாமல் பண்ணையார் வீட்டு எஜமானியாக்கி அழைத்துப் போக விரும்புகிறார் போலிருக்கிறது."
"ஆமாம்; அத்தகைய விருப்பம் அவருக்கு இருக்கிறதென்று என்னிடமும் தெரிவித்தார். ஆனால் இந்தக் குழந்தைதான் அவர் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கிறான். அவனை எங்கேயாவது ஓர் அநாதை ஆசிரமத்தைப் பார்த்து தொலைத்துவிட வேண்டும் என்கிறார்."
"அது இயற்கைதானே?"
"எது இயற்கை! புருஷர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் கல்நெஞ்சர்களாயிருப்பார்கள் போலிருக்கிறது."
"இல்லை, இல்லை! 'மிஸ்டர் மனோகர் அப்படிச் சொல்வது இயற்கைதானே' என்றேன். எல்லா புருஷர்களும் அப்படியிருக்க மாட்டார்கள்."
"அது உண்மைதான்; சிலருக்குக் குழந்தைகள் என்றாலே பிடிப்பதில்லை. அன்றைக்கு மனோகர் இந்தக் குழந்தை விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார் பாருங்கள்! அதிலும் 'நொண்டிப் பயலே!' என்று அவர் அழைத்தபோது எனக்கு அசாத்திய கோபம் வந்தது. அடக்கிக் கொண்டேன். பச்சைக் குழந்தையின் இளம் உள்ளத்தைப் புண்படுத்தக் கூடாது என்று கூடச் சிலருக்குத் தெரிவதில்லை. அடுத்தாற்போல, நீங்களும் ராஜ்மோகனும் பார்த்தவுடனேயே சிநேகமாகி விட்டீர்கள்."
