நாராயணனுடைய ரூபம்
நாராயணனுடைய ரூபம் பிரம்மாவும், தஷாதிகளும், காலமும், சகல பூதங்களும் ஜெகன் நாயகனான ஸ்ரீமந் நாராயணின் லோகசிருஷ்டி ஹேதுக்களான (ஹேதுக்கள் என்றால் காரணம்) லீலா விபூதிகளாகும் (லீலா விபூதி - மூல பிரகிருதியால் தோன்றிய இந்த அண்டமானது பிரம்மாண்ட கோடி அண்டங்கள் கொண்டது) (விபூதி என்றால் மேன்மையை அடைவது என்று பொருள்). உபேந்திராதியவதார சொரூபங்களும், மனு முதலானவர்களும், காலமும், சகல பூதங்களும் ஸ்ரீவிஷ்ணுவினுடைய லோக சங்கார காரணங்களான விபூதிகளாகும். பிரம்மாவும், மரீசி முதலிய பிரஜாபதிகளும் ஆதிகாலம் முதல் பிரளயகாலம் வரையிலும் சதுர்வித பூதசாதங்களைப் (உயிரினங்களை) படைத்து வருகின்றார்கள். ஆதிகாலத்தில் இருந்து பிரம்மாவினாலும் இடைகாலம் முதல் மரீசி முதலிய பிரஜாபதிகளாலும் பிறகு அந்தந்த ஜந்துக்களாலும் படைக்கப்பட்டு வருகின்றன. படைப்புக்கெல்லாம் முக்கிய காரணம் என்பது காலம் ஆகும். அந்த காலத்தின் சக்தியல்லாமல் பிரம்மாவும், தஷாதிகளும், பிரஜைகளும் படைக்க மாட்டார்கள். ஸ்திதியும் இதே போன்று அதாவது காலத்தின் சக்தியில்லாமல் நடைபெறாது. பிரளயத்திலே ருத்திராதிகளும் கால சக்தியின்றி சங்கரிக்க மாட்டார்கள். மைத்ரேய முனிவரே! நாம் பேசுகின்ற அநேக வார்த்தைகளினால் உண்டாகக்கூடிய பயன் என்பது என்ன? எதனால் இவைகள் படைப்படுகின்றன? எதனால் எது தோன்றுகின்றதோ அந்த தோன்றுதலின் அடிப்படையாக இருக்கக்கூடிய வஸ்துவின் படைப்பைக் குறித்து காரணமாக இருக்கும். தோன்றுதலுக்கு காரணமாக இருக்கக்கூடிய வஸ்துவெல்லாம் (வஸ்து என்றால் பொருள்) எம்பெருமானின் திருமேனியே ஆகும். இதுபோலவே ஒன்றை அழிக்கின்ற வஸ்து ஏதேனும் உண்டு எனில் அதுவும் அழிகின்ற காரணங்கள் யாவற்றையும் உள்ளடக்கிய ஜனார்த்தனனுடைய வுத்திர ரூபமாகும். ஸ்ரீமந் நாராயணனே சிருஷ்டியும், ரக்ஷனையும், சங்காரமும் செய்யும் ஜீவன்களுக்கு அந்தரியாமியாகிச் சிருஷ்டி, ஸ்திதி, சங்கார தொழில்கள் யாவற்றையும் செய்து அருளுகிறான். இந்த விதமாகவே சத்துவ, ராஜச, தமோ குணங்களில் புகுந்து சிருஷ்டிக்காலம் முதலிய காலங்களினால் மூன்று விதமாக இருக்கிற பிரம்மாதி ஸ்தாவாரந்தமான நாராயணனுடைய ரூபத்தை விவரித்து கொண்டு இருந்தார் பராசர முனிவர். இதுவரை உயிரினங்களைப் படைக்கின்ற பொழுது நாராயணன் எடுத்திருக்கின்ற ரூபத்தை பற்றி யாம் உமக்கு விவரித்து இருந்தோம். இனி படைத்திருந்த அந்த உயிரினங்களுக்கு முக்தி அளிக்கக்கூடிய ஜீவமயமாக இருக்கக்கூடிய நாராயணனுடைய ரூபத்தை எடுத்து உரைக்கின்றேன் பொறுமையுடன் கேட்பாயாக! குணங்களில் அதிபதியாகவும், ஞான தத்துவம் நிறைந்தவராகவும், சூரியனைப் போன்று இருளை நீக்கி ஒளியை அருளுகின்ற பிரகாசம் நிறைந்திருக்க கூடியவராகவும், சகல பூதங்களில் யாவற்றிலும் உறைந்திருக்க கூடியவராகவும், பிரம்மாதி ஜீவசாதங்களை விட மிக உயர்ந்த முக்தஜீவ சொரூபமாக இருக்கக்கூடிய ஸ்ரீமந் நாராயணனுடைய பரஸ்வரூபம் என்று அழைக்கப்படும். அந்த ஸ்வரூபமும் நான்கு விதமாக இருக்கின்றன. இவ்வாறு பராசர மகரிஷி முனிவர் எடுத்து உரைத்து கொண்டிருந்த பொழுது மைத்ரேயருக்கு ஓர் ஐயம் ஏற்பட துவங்கியது. தன்னுடைய மனதில் தோன்றிய ஐயங்களை தனது குருநாதரிடம் கேட்க முற்பட்டார். குருநாதரே இவ்விடத்தில் எமக்கு ஒரு ஐயம் தோன்றுகின்றது என்று உரைத்து, ஞானமயமாய் இருக்கக்கூடிய நாராயணனுக்கு சரீர பூதமான முக்த ஸ்வரூபம் என்பது நான்கு ரூபங்கள் என்று கூறினீர்கள் அல்லவா! அந்த நான்கு ரூபங்களை பற்றியும் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டினார் மைத்ரேயர். தனது மாணவனின் மனதில் தோன்றிய ஐயங்களை விளக்கி அவருக்கு புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பது குருமார்களின் இன்றியமையாத ஒரு கடமையாகும் அல்லவா! தனது கடமையை உணர்ந்து பராசர முனிவரும் மைத்ரேயரின் விருப்பத்திற்கு இணங்கி நாராயணனுடைய முக்த சொரூபமாக இருக்கக்கூடிய நான்கு ரூபங்களையும் விளக்க துவங்குகிறார். மைத்ரேய முனிவரே இந்த உலகத்தில் அவரவர்களின் விருப்பத்திற்கு உரிய பொருளை ஈட்டுவதற்கு உதவியாக இருக்கக்கூடியது சாதனம் என்றும், அதற்கு பிடித்த முக்கிய காரணமாக இருக்கக்கூடியது சாத்தியம் என்றும் கூறப்படுகின்றது. மோட்சத்தை விரும்பி இருக்கக்கூடிய யோகிகளுக்கு பிராணயாமம் என்பது சாதனமாகவும், பரப்பிரம்மம் என்பது சாத்தியமாகவும் இருக்கின்றது. யோகிகளுக்கு முக்தி நிமிர்த்தமாக யோக சாஸ்திரத்தினால் தோன்றிய பிராணயாமம் என்ற சாதனத்தின் மூலம் பெறப்படுகின்ற ஞானமானது அந்த ஞானமய ரூபத்திற்கு முதல் பேதமாகும். பாதமோட்சனார்த்தமாக யோகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவனுக்கு சாத்தியமாய் இருப்பது சாஸ்திரத்தினால் உண்டான ஆன்ம விஷயமான ஞானமானது இரண்டாவது பேதமாகும். இவ்விரண்டும் சாத்திய சாதன தொடர்புகளினால் தோன்றியவை என்பது தேவ மனுஷியாதி பேதமில்லாத ஆன்மாவைப் பற்றி வியாபித்திருக்கின்ற தியான ரூபமான ஞானமானது மூன்றாவது பேதம். இந்த மூன்று வகையான ஞானங்களுக்கும் சாதனமாக இருத்தலாகிய விசேஷம் யாது உண்டோ அதைத் தள்ளுதலினாலே தோன்றும் ஆத்ம சாட்சாத்காரமானது நான்காவது பேதமாகும். இந்த ஞானம் பொருளான ஆன்ம ஸ்வரூபமானது சாதனா அனுஷ்டானம் இல்லாததாய் ரூபாதிகளுக்கு கோசரமாகத்தாய் சுருக்கமின்றி வியாபித்திருப்பதாய், உபமான ரகிதமாய், தன்னாலேயே அறியத்தக்கதாய், விருத்தி க்ஷயாதிகளற்றதாய், குறிகளால் அறியப்படாததாய், உணவாசை முதலிய ஆறு ஊர்ஜிகமற்றதாய், பற்றாததாய் நின்று ஞானமயனான ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு பிரம்மம் என்ற பெயர் கொண்ட சொரூபம் என்று வழங்கப்படும். எந்த யோகிகள் அந்த சொரூபத்தில் முடிவு காலத்தில் அந்த சொரூபத்தின் சக்தியினாலே வேறு எந்த நினைப்பும் இல்லாமல் சகல உபாதிகளும் இல்லாமல் இருக்கக்கூடிய லயத்தை அடைகின்றார்களோ அவர்கள் சம்சாரம் என்ற கடலில் இருந்து மோட்ச பாதையில் செல்வதற்கான வழியை அறிந்தவர்கள் ஆவார்கள். யான் உமக்கு இப்போது விவரித்த பொழுது முக்த ஸ்வரூபத்துக்கு உள்ள சகல குணங்கள் யாவற்றையும் கொண்டதாய், நித்திய சுத்தமாய், சர்வாத்மகமாய், பரிபூரணமாய், வேறு எந்த இழி குணங்களில்லாததாய், கல்யாண குணங்களைக் கொண்டதாய், ஸ்ரீவிஷ்ணு என்ற திருநாமமுடைய உத்தம ஸ்வரூபம் ஒன்று உள்ளது. அந்த உத்தம ஸ்வரூபம் தான் பரப்பிரம்மம் என்று அழைக்கப்படும். அந்த பரப்பிரம்மத்தை அடைந்த யோகியானவன் புனராவிருத்தி இல்லாமல், புண்ணிய பாவ வர்ஜிதனாய், சகல கிலேசமும் இல்லாதவனாய், அத்யந்த நிர்மலமான ஆனந்தானுபவம் செய்து கொண்டிருப்பான். இவ்விதமாக அழைக்கப்படுகின்ற பரப்பிரம்மத்துக்கு மூர்த்தம், அமூர்த்தம் என்று இரண்டு ரூபங்கள் உண்டு. அந்த இரண்டு மூர்த்தங்களில் பிரம்மாதி ஜீவ சாதங்கள் மூர்த்தம் என்றும், அது என்றும் அழிவதாகையால் க்ஷரம் என்ற பெயரை கொண்டு அழைக்கப்படுகின்றன. முக்த சொரூபமானது அமூர்த்தம் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த சொரூபம் அழியாத வகையில் இருப்பதினால் அக்ஷரம் என்ற பெயரைப் பெற்று உள்ளது. நாராயணனின் சக்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. எண்ணில் அடங்க முடியாத அளவில் இந்த ஜெகம் முழுவதும் பரவி வியாபித்து இருக்கின்றது. அதாவது அனல் கொண்டிருக்கக்கூடிய நெருப்பின் சுடரை அருகில் இருந்து பார்க்கும் பொழுது அதன் சிறப்பு அதிகமாக இருக்கும். அதே நெருப்பினை தொலைவிலிருந்து பார்க்கும் பொழுது அதன் சிறப்பு மிகவும் சொற்பமாகவே இருக்கும். அதுபோலவேதான் நாராயணனுடைய சக்தியும், வளமையும், வலிமையும், அவர் கொண்டிருக்கக்கூடிய சிறப்பையும் யாம் உமக்கு எடுத்து உரைக்கின்றோம் பொறுமையுடன் கேட்பாயாக! பிரம்மா, விஷ்ணு, ருத்திரரிடத்திலே பிரம்ம சக்தியானது அதிக அளவில் வியாபித்திருக்கும். அதிலே பிரம்மா, ருத்திரர்களிடத்திலே அனுப்பிரவேசமாகவும், விஷ்ணுவினிடத்திலே சொரூபமாகவும் இருக்கும் என்று அறிய வேண்டும். இனி, அவர்களைக் காட்டிலும் தக்ஷாதிகளும், அவர்களைவிட மனிதர்களும், அவர்களைவிட பசு, பட்சி சரீர ரூபங்களும், அவற்றை விட மரஞ்செடி கொடிகளும் முறை முறையாகக் குறைந்திருக்கும். இவ்விதமாக உயிர்களின் உற்பத்தியும் அறிவு முதலிய நிகழ்வுகள் கணக்கற்றதாகவும், நித்தியம் ஆனதாகவும் இருக்கின்ற இந்த பிரபஞ்சம் என்பது எம்பெருமானுக்கு ஒரு ரூபம் மட்டுமே ஆகும். யாம் உமக்கு முன்னரே உரைத்தது போன்று பல சக்திகளையும், வல்லமைகளையும் கொண்டிருக்கக்கூடிய எம்பெருமானுக்கு மற்றொரு ரூபமும் உண்டு. மந்திர ஜபாதி சகிதமான சாலம்பனம் என்ற மகாயோகத்தை பயிலும்போது யோகிகளுக்குள்ளே அஸ்திர பூஷணாதி சகிதமும், திவ்யமுமான விஷ்ணு தேவனுடைய அந்த ரூபம் தான் தியானம் செய்ய வேண்டுவதாகும். சித்தத்தை நிச்சலமாக்கி யோகாப்பியாசம் செய்யும் யோகியாருக்கு இப்போது நான் அறிவித்த தியானச் சிறப்பு சித்திக்கும். மைத்ரேயரே! அந்த எம்பெருமானுக்கு முன்பு சொன்ன சகல ரூபங்களை விட பரமமான ரூபம் அந்த விஷ்ணு ஸ்வரூபமேயல்லாது வேறல்ல. அதுவே திருவுள்ளமுகந்த ஸ்வரூபம். ஏனென்றால், அந்த ஸ்ரீஹரியே சர்வாத்துமகமான பரப்பிரம்ம சொரூபம். சித்தத்தை நிலைநிறுத்தி எந்தவிதமான சிந்தனைகளும் இல்லாமல், சஞ்சலங்கள் ஏதும் இல்லாமல் யோகங்கள் பயிற்சி செய்கின்ற அனைத்து யோகிகளுக்கும் இப்போது நான் தெரிவித்திருந்த அந்த தியானத்தின் சிறப்பு அவர்களுக்கு சித்தியாகும். மைத்ரேயரே! சகல இடங்களிலும் வியாபித்து இருக்கக்கூடிய அனைத்தும் கொண்டவனுக்கு முன்பு உரைத்த சகல ரூபங்களை விட பரமமான ரூபம் அந்த விஷ்ணு ரூபம் இல்லாதது வேறு என்பது இல்லை. அந்த ரூபமே திருவுள்ளம் உகந்த ரூபம் ஆகும். ஏனென்றால் ஸ்ரீ ஹரியே சர்வாத்துமகமான பரப்பிரம்ம சொரூபம் ஆகும். அவனிடத்தில் அனைத்து சகல லோகங்களும், வஸ்திரங்களில் நூல்களை போல கலந்து கொண்டு இருக்கின்றன. சகல உலகங்களும் அவனாலேயே தோன்றி அவனிடத்திலே நிலை கொண்டு இருக்கின்றன. க்ஷராக்ஷரமயனான ஸ்ரீவிஷ்ணு, பிரகிருதி புருஷாதிகளையெல்லாம் அஸ்திர பூஷணங்களாக தரிந்திருப்பவன் என்று பராசரர் கூறினார். பராசர முனிவர் கூறியதை கேட்டதும் மைத்ரேய முனிவர் தன்னுடைய குருவிடம் ஸ்ரீமந் நாராயணன் சகல ஜெகத்தையும் அஸ்திரபூஷண சொரூபமாக தரித்திருக்கும் விதத்தை எடுத்து உரைக்க வேண்டும் என்று கேட்டார். பராசர முனிவரும் தன்னுடைய சீடரின் விருப்பத்திற்கு இணங்கி நாராயணனின் அப்பிரமேயனாயும், சர்வ சக்தனாயும் சர்வேசுவரனாயும் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீவிஷ்ணு பகவானுக்கு தெண்டம் சமர்ப்பித்து, என் பிதாமகனான வசிஷ்ட முனிவர் அருளிச்செய்த வண்ணம் ஸ்ரீமந் நாராயணனுடைய அஸ்திரபூஷணாதி சொரூபத்தை துவங்குகின்றார். உலகத்தோடு ஒட்டாதவனும், பிரகிருதி குணராகிதனுமான க்ஷேத்திரக்ஞனே, கௌஸ்துபமணியாகவும் ஜகதாதி காரணமான மூலப்பிரகிருதியே! ஸ்ரீவச்சம் என்ற மறுவாகவும், புத்தியே! கௌமோதகி என்ற கதாயதமாகவும், சாமசாகங்காரமே பாஞ்சசன்னியம் என்ற சங்காகவும், சாத்விகங்காரமே சாரங்கம் என்ற வில்லாகவும், சலனாத்மகமான மனமே மகா வேகத்தில் வாயுவையும் மிஞ்சக்கூடிய சுதர்சனம் என்ற சக்கரமாகவும், பஞ்ச மஹா பூதங்களும், முத்து மாணிக்க மரகத இந்திர நீல வஜ்ஜிரமயமாய், பஞ்சவர்ணமான வைஜயந்தி என்ற வனமாலையாகவும், ஞானேந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் அம்புகளாகவும், வித்தையே அத்யந்த நிர்மலமான நந்தகம் என்ற கத்தியாகவும், அவித்தையே அந்தக் கத்தியின் உறையாகவும் ஸ்ரீமந் நாராயணன் பிரகிருதி புருஷர்களையெல்லாம் அஸ்திர பூஷண சொரூபமாக தரித்துக் கொண்டு விசித்திர சக்தியுக்தனாகி சேதனருக்கெல்லாம் இதஞ்செய்தருள்வான். வித்தையும், அவித்தையும், சேதனமும், அசேதனமும் நாராயணனிடத்தில் தான் இருப்பவை. கலா, காஷ்டா முகூர்த்த அகோராத்திர மாச அயன சம்வச்சரரூபமான காலமும் ஸ்ரீஹரி சொரூபமாகும். பூலோக புவர்லோக சவர்லோகங்களும், மகாலோக, ஜனலோக தவலோக சத்தியலோகங்களும், தேவ, மனுஷ்ய பசு, பக்ஷியாதி உயிர் வகைகளும், ரிக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்கிற வேதங்களும், உபநிஷத்தக்களும் இதிகாசங்களும், வேதாங்கங்களும், மநுவாதி ஸ்மிரிதிகளும், கல்ப சூத்திரங்களும், காவியங்களும், கீதங்களும் மற்றும் உண்டான இதர சாஸ்திர வகையும் மூர்த்தங்களாயும், அமூர்த்தங்களாயும் இருக்கும் பதார்த்தங்களும் ஸ்ரீமந் நாராயணனுடைய சரீரமே என்று நினையுங்கள். யாவருக்கும் ஸ்ரீஹரியே ஆத்மபூதன்! சகலமும் அவனே! அவனைக் காட்டிலும் காரியமும் காரணமுமான வேறுபொருள் இல்லை என்ற திடசித்தம் எவனுக்கு ஏற்படுகிறதோ, அவன் பிறவித்தொடர்புடைய, தொந்த துக்கமில்லாமல் பரமமான மோட்ச ஆனந்தத்தை அடைவான். மைத்ரேயரே! சகலபாபக்ஷயகரமான ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் முதலாம் அம்சத்தை, இருபத்திரண்டு அத்தியாயங்களில் விளக்கமாகச் சொன்னேன். இந்த முதலாவது அம்சத்தை கேட்ட மனிதருக்கு, புண்ணிய நதிகளில் பன்னிரண்டு ஆண்டுகள் கார்த்திகைப் பௌர்ணமி, அமாவாசையில் ஸ்நானம் செய்த பயன் உண்டாகும். புத்திர பவுத்திர தன கனக, வஸ்து வாகனங்களும், அட்சயமான பரமபத சுகமும் உண்டாகும்! தேவ, ரிஷி, பிதுர், கந்தர்வ, யக்ஷர் ஆகியோரது படைப்பு வரிசை முறையைக் கேட்டவருக்கு, தேவ, ரிஷி கந்தர்வாதிகளனைவரும் மகிழ்ந்து வலுவிலேயே சகல அபீஷ்டங்களையும் கொடுப்பார்கள்.
