பிரியவிரதனுடைய வம்சம்
பிரியவிரதனுடைய வம்சம் பராசர முனிவரே! உலகப் படைப்புகளைப் பற்றி எமக்குள் இருந்துவந்த பலவிதமான ஐயங்களுக்கு நீங்கள் அளித்த விடையானது ஓரளவு திருப்தியை ஏற்படுத்தியது. இருந்தாலும் எனக்கு உலகப் படைப்புகளில் இன்னும் பல செயல்பாடுகளை பற்றி அறிந்து கொள்வதில் பலவிதமான தடைகளும், சில ஐயங்களும் தோன்றுகின்றன. அதையும் தாங்கள் எடுத்துரைத்தால் எனக்கு இன்னும் உத்வேகமாக இருக்கும். சுவாயம்புவ மனுவின் பிள்ளைகளான பிரியவிரதன், உத்தானபாதன் என்பவர்களில் உத்தானபாதனுக்கு துருவன் என்ற மகன் பிறந்தான் என்று கூறினீர்கள். மற்ற பிரியவிரதனுடைய வம்சத்தை பற்றித் தாங்கள் எடுத்து உரைக்கவில்லை. ஆகையால் அவர்களை பற்றிய விவரங்களையும் எடுத்து உரைக்க வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். புன்னகைத்த வண்ணமாக அதற்கென்ன மைத்ரேயரே! அவர்களுடைய விவரங்களை பற்றியும் யாம் உமக்கு கூறுகின்றோம் என்று கூறி அவர்களைப் பற்றிய விவரங்களையும் எடுத்துரைக்க துவங்குகின்றார். அந்த பிரியவிரதன் கர்த்தமப் பிரஜாபதியின் மகளை மணந்து சம்ராட்டு, குஷி என்ற இரு பெண்களையும் ஆக்கினீத்திரன், அக்கினிபாகு, வபுஷ்மான், தியுதிமான், மேதா, மேதாதிதிபவியன், வைனன், புத்திரன், ஜியோதிஷ்மான் என்ற பிள்ளைகளையும் பெற்றான். அவர்கள் அனைவரும் மகாஞானியர்கள். இவர்களில் ஜியோதிஷ்மான் என்பவன் தனது பெயருக்கேற்ற வகையில் மிகவும் தேஜஸ் உடையவனாக விளங்கினான். பிரியவிரதனின் பிள்ளைகளில் மேதா, அக்கினிபாகு, புத்திரன் என்ற மூவரும் பூர்வஜென்ம ஞானத்தால் யோகாப்பியாசத்தில் முக்கிய மகானுபவராய் அரசாட்சி முதலியவற்றில் பற்றற்றவராய், கர்ம பலன்களை விரும்பாதவராய் விதிப்படி கர்மாதிகளைச் செய்து வந்தனர். அதனால் பிரியவிரதன் தன்னுடைய ஆட்சியிலிருந்த ஏழு தீவுகளை அந்த எழுவருக்கும் ஒப்படைத்தான். அவர்களில் ஆக்கினீத்திரன் என்பவன் ஐம்பூத் வீபத்தையும், மேதாதி என்பவன் பிலக்ஷத்து வீபத்தையும், வபுஷ்மான் என்பவன் குசத் வீபத்தையும், தியுதிமான் என்பவன் கிரவுஞ்சக்தி வீபத்தையும், பவியன் என்பவன் சாகத்து வீபத்தையும், வைனன் என்பவன் புஷ்பகரத்து வீபத்தையும் அரசாண்டு வந்தார்கள். ஜம்பூத் தீவின் அதிபதியான ஆக்கினீத்திரனுக்கு நாபி, கிம்புருஷன், ஹரிவருஷன், இளாவிரதன், ரமியன், இரண்வான், குரு, பத்திராசுவன், கேதுமாலன் என்ற ஒன்பது புதல்வர்கள் பிறந்தனர். ஜம்பூத் தீவின் அதிபதியான ஆக்கினீத்திரன் தனது அரசான ஜம்பூத்வீபத்தை ஒன்பது பங்காக்கி, நாபிக்கு தென்பகுதியான பாரத வருஷத்தையும், ஹரிவருஷனுக்கு நைஷத்தையும், இளாவிரதனுக்கு மேருமலையின் இடைப்பட்ட இளாவிருத வருஷத்தையும், ரமியனுக்கு நீலாசலத்தைச் சேர்ந்த ரம்மியக வருஷத்தையும், இரண்யவானுக்கு அதற்கு வடக்கிலுள்ள ஸ்வேத வருஷத்தையும், குரு என்பவனுக்கு சிருங்கலத் என்ற மலைக்கு வடக்கிலுள்ள குரு வருஷத்தையும், பத்திராசுவனுக்கு மேருமலையின் கிழக்கேயுள்ள பத்திராசுவ வருஷத்தையும், கேதுமாலனுக்கு கந்தமாதன வருஷத்தையும் கொடுத்து அவர்களுக்கு ராஜ்ஜியப் பட்டாபிஷேகம் செய்து விட்டுத் தவவேடம் பூண்டு, மிகவும் தூய்மையான சாளக்கிராமம் என்ற திவ்ய க்ஷத்திரத்திற்குப் போய் சேர்ந்தான். கிம்புருஷ வருஷம் முதலான எட்டு வாசஸ்தானங்களிலும் வசிப்போருக்கு யாதொரு முயற்சியும் இல்லாமலேயே பெரும்பான்மையின் சுகானுபவயே கிடைக்கும். துக்க அனுபவமும், மூப்பு, சாவு, இவை பற்றிய பயமும், தருமம், அதருமம் என்பவைகளும் உத்தமன், மத்தியமன், அதமன் என்ற வித்தியாசங்களும், பிராணிகளுடைய உடல் குறைதல் போன்ற அடையாளமுள்ள யுகபேதங்கள் இல்லை. ஹிமாஹ்வயம் அல்லது பாரதம் என்ற தேசத்துக்கு அதிபதியான நாபி என்பவர் மேரு தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு அந்த தம்பதிகளுக்கு மிகவும் தேஜசுடைய ரிஷபர் என்பவர் பிறந்தார். ரிஷபர் நூறு பேர்களுள் மூத்தவர் ஆவார். அந்த ரிஷப மகாராஜன் தர்மமாக ராஜ்ஜிய பரிபாலனம் செய்து உலக நன்மைக்காகவும், பிரஜைகளுக்காகவும் பலவிதமான யாகங்களையும் செய்தார். பின்பு மூத்த குமாரனான பரதனுக்கு ராஜ்ஜியப் பட்டாபிஷேகம் செய்வித்து விட்டு, தவஞ்செய்யும் பொருட்டு புலவருடைய ஆசிரமமான சாளக்கிராம க்ஷத்திரத்திற்குச் சென்றார். அங்கு அவர் வானப் பிரஸ்த விதிப்படி தவங்களையும், யாகங்களையும் செய்ய துவங்கினார். அந்த தவமுயற்சியினால் உடலிலுள்ள நரம்புகள் வெளித்தோன்றும்படி மிகவும் இளைத்துப் போனார். பிறகு தனது ஆடைகளையெல்லாம் எறிந்து, நிர்வாணமாய், வாயில் பந்து போன்ற கற்கவளத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்து மகாப்பிரஸ்தானம் (பிரஸ்தானம் எனில் பிரம்மத்தை அறியும்ஃஅடையும் வழி) போய்விட்டார். இவ்விதமாக பரத மகாராஜனுக்குக் கொடுக்கப்பட்டதால் இந்த தேசத்திற்குப் பாரத வருஷம் என்ற பெயர் வழங்க பெறுகின்றது. அந்த பரதனுக்கு தர்மசீலனான சுமதி என்ற புதல்வன் பிறந்தான். பரதனும் தாம் இந்த பரத கண்டத்தில் வாழும் வரை நீதிமுறைப்படி அரசாண்டு தன்னுடைய பிரஜைகளுக்கு பலவிதமான உதவிகளையும், அவர்களின் இன்னல்களையும் களைந்தார். பின்பு பலவிதமான யாகங்களைச் செய்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தன்னுடைய புத்திரனுக்கு ராஜ்ஜியத்தைக் கொடுத்துவிட்டு, சாளக்கிராம க்ஷத்திரத்திற்குச் சென்று, யோகாப் பியாசஞ் செய்து, தன்னுடைய பிராணனை விட்டான். அவன் செய்த அந்த நற்கர்மங்களின் பயனாக மறுபடியும் உத்தமமான யோகியர் வம்சத்தில் ஒரு நற்குணம் நிறைந்தவனாக பிறந்தான். மைத்ரேயரே! அந்தப் பரதனின் சரித்திரத்தையும், வாழ்ந்த விதத்தையும் பற்றி பிறகு உமக்கு உரைக்கின்றேன். பரதனின் குமாரனான சுமதிக்கு, இந்திரத்தியும்னன் என்ற குமாரன் பிறந்தான். அவனுக்கு பரமேஷ்டி என்பவன் குமாரன். அவனுக்குப் புத்திரன் பிரதிஹாரன். அவனுடைய மகன் பிரதிகர்த்தா. அவனுக்கு பவன் என்பவனும், அவனுக்கு உத்கீதி என்பவனும், அவனுக்கு பிரஸ்தாவன் என்பவனும் பிறந்தார்கள். அவன் மகன் பிருது. பிருதுவின் மகன் நக்தன், அவனுடைய மகன் கயன். கயனுடைய மகன் நான். அவன் மகன் விரோகணன். அவன் மகன் வீரியன். அவன் மகன் தீமான். அவன் மகன் மகாந்தன். அவன் மகன் பாவனன். அவன் மகன் துவஷ்டா. அவனுக்கு மகன் விரஜன். விரஜனுக்கு ரஜன். அவன் மகன் சதஜித்து. அந்த சதஜித்துக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்தவன் விஷ்வக்ஜோதி. இந்த விஷ்வக்ஜோதி முதலியவர்களால் தான் பிரஜைகள் நன்றாக வளர்க்கப்பட்டார்கள். அவர்களால் இந்தப் பாரத வருஷம் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அவர்களது குலத்தில் பிறந்தவர்களால், பாரத பூமியானது எழுபத்தொரு சதுர்யுகம் வரை அனுபவிக்கப்பட்டது. இதுதான் சுவாயம்புவமனுவின் படைப்பாகும். இந்த வராக கல்பத்தில், முதலாவது மனுவான சுவாயம்புவமனுவின் காலத்தில்தான் இந்தப் பிரியவிரத சந்ததிக் கிரமம் நடைபெற்றது. சுவாயம்புவமனுவின் படைப்புக் கிரமத்தைக் விவரங்களைப் பற்றி எடுத்துரைத்து முடித்தார் பராசர முனிவர்.
