நாணயத்தின் பகுதிகள்

bookmark

இன்றைய நாணயங்கள் போன்றே அக்கால நாணயங்களிலும் தலை, பூ என்ற இரு பகுதிகள் உள்ளன. இவற்றில் மன்னர்களின் பெயரையோ பட்டப் பெயரையோ மட்டுமே பொறித்துள்ளனர். காலத்தைப் பொறிக்கவில்லை. கி. மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சின்னம் பொறித்த நாணயங்கள் கோவை மாவட்டத்துப் பள்ளலூரில் சவக்குழிகளில் கிடைத்துள்ளன. இதன் தலைப் பகுதியில் யானையின் சின்னம் பொறித்துள்ளனர். காஞ்சிபுரத்தில் கிடைத்துள்ள பல்லவர் கால நாணயங்களின் ஒரு பகுதியில் இரண்டாம் இராசசிம்மனின் பட்டப் பெயரான ஸ்ரீநிதி அல்லது ஸ்ரீபர என்பதும் பல்லவர் முத்திரையான காளைச் சின்னமும் காணப்படுகின்றன. சில நாணயங்களில் ஒன்று அல்லது இரண்டு மீன் சின்னங்கள் பொறித்துள்ளனர். மறு பகுதியில் சக்கரம், பிறைமதி, சைத்திய கோபுரம், குடை, ஆமை முதலியவற்றுள் ஏதேனும் ஒரு சின்னம் இடம் பெறுகின்றது.

பொருளாதார நிலை:

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பொன், காணம், காசு ஆகிய நாணயங்களின் வடிவ அமைப்பு, எடை ஆகியவை குறித்து அறிய முடியவில்லை. சோழர் காலக் கல்வெட்டுகள் குறிக்கும் காசு, பழங்காசு, மாடை முதலிய தங்க நாணயங்களில் 127 நாணயங்கள் தவளேச்சுரத்தில் கிடைத்துள்ளன. இவை தவிர பிற இடங்களில் கிடைத்துள்ள நாணயங்கள் முழுக்க தங்கத்தால் ஆனவையல்ல. பிற உலோகக் கலப்புடையவை. பிற்காலச் சோழர்கால நாணயங்கள் பெரும்பாலும் செம்பால் ஆனவையே. இம்மாற்றம் அக்காலத்தின் பொருளாதார நிலையைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகின்றது .