சங்ககால தமிழக வரலாற்றை அறிந்து கொள்வதில் நாணயவியல் பங்கு
18 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில சதுர செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மன்னர் உருவம் பொறிக்கப்படாத அக்காசுகளில் முன்புறம் யானை உருவமும் பின்புறம் வில் அம்பு உருவமும் காணப்பெறுகிறது. முத்திரை குத்தப் பெற்ற காசுகள் ஜனபதக் குழுக்களால் வெளியிடப்பெற்றவை எனக் கொள்ளப்படுகிறது. அதை போலவே மேற்குறிப்பிட்ட காசுகள் வில்லைக் குலக் குறியீடாகக் கொண்ட குடியினரால் வெளியிடப்பெற்றவை எனக் கூறலாம்.
முத்திரைக்காசு
தமிழகத்தின் முத்திரைக் காசுகள் பெரும்பாலும் பொ.மு. 5ஆம் நூற்றாண்டு முதல் பொ.மு. இரண்டாம் நூற்றாண்டின் பொருளாதாரத்தையும் வரலாற்றையும் நிறுவப் பயன்படுகிறது. முதலில் இவற்றைப் போன்ற முத்திரைக் காசுகள் வட இந்தியாவில் இருந்து தமிழகம் வந்தவை என்ற கருத்து நிலவியது. ஆனால் மகாலிங்கம் போன்றவர்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதலே பாண்டியர்கள் முத்திரைக்காசுகளை வெளியிட்டுள்ளதால், இக்காசுகள் வட இந்தியா வழியே தமிழகத்துக்கு வந்தவை என்ற கருத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார். அதற்கு வழுச்சேர்க்குமாறு தமிழகத்தில் முத்திரைக் காசுகளை வெளியிட பயன்படுத்திய வார்ப்புக் கூடுகள் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
