நாட்டுப் படலம் - 83
மங்கையரை மயில்கள் பின்தொடர்தல்
83.
இடம் கொள் சாயல் கண்டு, இளைஞர் சிந்தைபோல்,
தடங் கொள் சோலைவாய், மலர் பெய் தாழ் குழல்
வடம் கொள் பூண் முலை மடந்தைமாரொடும்
தொடர்ந்து போவன-தோகை மஞ்ஞையே.
தோகை மஞ்ஞை - தோகையை உடைய ஆண் மயில்கள்; தடம்
கொள் சோலைவாய்- விசாலமான சோலையினிடத்தே; இடம் கொள்
சாயல் கண்டு- (தமது பெண் மயில்களின் பெருமைக்குரிய சாயலைப்
பார்த்து); இளைஞர் சிந்தை போல்- இளம் வயதினரான ஆண்களின்
(மனத்தைப் போல; மலர் பெய்தாழ் குழல்- மலரணிந்த நீண்ட
கூந்தலையும்; வடம் கொள் பூண் முலை- முத்து மாலைகளை
அணிந்த தனங்களையும் உடைய; மடந்தை மாரொடு- அந்தப்
பெண்களுடனே; தொடர்ந்து போவன- பின்தொடர்ந்து செல்வனவாம்.
ஆண் மயில்கள் சோலையில் உலாவும் பெண்களை சாயலால் மயில்
போன்றிருக்கும் அவர்களைப் பெண்மயில்கள் என்று கருதிப்
பின்தொடரும் என்றது மயக்கவணி. இளைஞர்: காளைப்
பருவத்தினரான ஆண்கள். இடம்: பெருமை. வடம்: முத்து வடம்.
தாழ்குழல்: நீண்ட கூந்தல். 52
