நாட்டுப் படலம் - 82

bookmark

சொரிவன இவை எனல்

82.

கோதைகள் சொரிவன, குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன, பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன, உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன, செவி நுகர் கனிகள்.
  
கோதைகள் குளிர் இள நறவம் சொரிவன-மலர் மாலைகள் இனிய
தேனைப்   பொழிவனவாம்;   பாதைகள்   கனகம்    சொரிவன -
வணிகத்துக்குரிய    கப்பல்கள்    பெரிய மணிகளையும், பொன்னையும்
கொண்டு   வந்து  குவிப்பனவாம்;  ஊதைகள்  உறையுறும்  அமுதும்
சொரிவன-   காற்று உயிர்காக்கும் அமுதத் துளிகளைச் சொரிவனவாம்;
காதைகள் செவிநுகர் கனிகள் சொரிவன- கவிஞர்களின் காப்பியங்கள்
செவிக்கினிய பாடல்களைத் தருவனவாம்.

மக்கள்    அணியும் மலர் மாலைகள் தேனையும், கப்பல்கள்,  மணி,
பொன்   ஆகியவைகளையும்,   காற்று   உயிர்   காக்கும்    அமுதத்
திவலைகளையும்  காப்பியங்கள்  இனிய பாக்களையும்    சொரிவனவாம்
என்பது கருத்து. பாதைகள்: காலினும் கலத்தினும் உறை: துளி

கவியின்பம்     செவியால்   நுகரப்படுவதாதலின் ‘செவி நுகர் கனி”
என்றார்.  கோதை: பெண்கள் கூந்தல் என்பதால்.  கூந்தலின்  அணிந்த
மலர் மாலை தேன் சொரியும் என்றும் பொருள்  கூறலாம்.  சத்துருக்கள்
உரையில்   மாண்பினை   செவிப்   புலம்    நுகர்வதோர்   தெய்வத்
தேன்கொலாம் (2266) என்று குறிப்பது இங்கு ஒப்பிடத்தக்கது.       51