நாட்டுப் படலம் - 77
‘நிகர்வன‘ இவை எனல்
77.
காரொடு நிகர்வன, கடி பொழில்; கழனிப்
போரொடு நிகர்வன, புணர்மலை; அணை சூழ்
நீரொடு நிகர்வன, நிறை கடல்; நிதி சால்
ஊரொடு நிகர்வன, இமையவர் உலகம்.
காரொடு நிகர்வன கடிபொழில்- மேகங்களுடன் அந்தநாட்டுச்
சோலைகள் ஒப்பனவாகும்; கழனிப் போரொடு நிகர்வன புணர்மலை-
வயல்களிலே குவித்து வைத்துள்ள நெற்போருடன் நெருங்கிய
மலைகள் ஒப்பனவாகும்; அணை சூழ் நீரொடு நிகர்வன நிறை கடல்-
அணைகளில் தேங்கிய நீர்த்தேக்கத்துடன் நீர் நிறைந்த கடல்
ஒப்பதாகும்; நிதிசால் ஊரொடு நிகர்வன இமையவர் உலகம்-செல்வம்
மிக்க அந்த நாட்டு ஊர்களோடு தேவர் உலகு ஒப்பதாகும்.
அந்த நாட்டுச் சோலைகள் மேகங்களை ஒத்தும், நெற் போர்கள்
மலைகளை ஒத்தும், நீர்த்தேக்கங்கள் கடலை ஒத்தும் ஊர்கள்
எல்லாம் தேவர் உலகை ஒத்தும் இருந்தன என்பது கருத்து.
புணர்மலை: மலைத்தொடர்ச்சி. 46
