நாட்டுப் படலம் - 75

bookmark

நகுவன இவை எனல்

75.

விதியினை நகுவன, அயில் விழி; பிடியின்
கதியினை நகுவன, அவர் நடை; கமலப்
பொதியினை நகுவன, புணர் முலை; கலை வாழ்
மதியினை நகுவன, வனிதையர் வதனம்.
 
வனிதையர் அயல் விழி - அந்நாட்டுப் பெண்களின் வேல் போன்ற
கண்கள்;  விதியினை நகுவன- நான்முகனைப் பழிப்பன; அவர் நடை
பிடியின்  கதியினை  நகுவன- அவர்களது நடை பெண் யானைகளின்
நடையைப் பழிப்பன;  புணர்  முலை கமலப் பொதியினை நகுவன -
அப்பெண்களின்    இணைந்துள்ள  மார்புகள்  தாமரை அரும்புகளைப்
பழிப்பன;  வதனம்   கலைவாழ்  மதியினை  நகுவன-  அவர்களது
முகங்கள் கலைகளை உடைய சந்திரனைப் பழிப்பனவாகும்.

பெண்களின்    விழிக்கு வேலும், நடைக்குப் பெண்யானை நடையும்,
தனங்களுக்குத்       தாமரை   அரும்பும்,   முகத்துக்குச்   சந்திரனும்
உவமைகளாகச்    சொல்லப்படுவன.  இங்கு  வேல்  முதலியவை  விழி
முதலியவைகளைவிட    விஞ்சியிருப்பதால் அவைகளை நகுவனவாயின
என்றது; எதிர்நிலையணியாம்.

படைத்த  நான்முகனே மயங்கவல்ல விழிகளாதலின் தமக்கு நிகராகா
(நான்முகனை)     கண்கள்   பழிப்பனவாம்.  மலர்வதும்  குவிவதுமான
தாமரை     முகையைப்   போலல்லாது   என்றும்  ஒரு  தனிமையாய்
இருக்கும்  தனங்கள்  தாமரை    முகைகளைப்  பழித்தன.  தேய்தலும்
வளர்தலுமாக  உள்ள  மதி  -   என்றும் மலர்ந்தே உள்ள முகத்துக்கு
நிகராகா  தாதலின் மதியை முகம் பழிப்பன வாயின என்று கூறியதன்
நயம் உணர்ந்து மகிழ்தற்குரியது.                              44