நாட்டுப் படலம் - 65

bookmark

65.

கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை, கடைசியர்,
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும்-நுளைச்சியர் செவ்வழி.
  
கடைசியர்  குரவை  -  மருத நில மாதர்களின் குரவைக்  கூத்துப்
பாடல்; கொன்றை     வேய்ங்குழல்    கோவலர்    முன்றிலில்-
கொன்றையாலும்    மூங்கிலாலும்    ஆகிய   குழல்களை     உடைய
இடையர்களின்  வீட்டு  முற்றங்களில்;  கன்று  உறக்கும்-  கன்றுகளை
உறங்கச்  செய்யும்;  நுளைச்சியர்  செவ்வழி-  நெய்தல்  நில மகளிர்
பாடும்  செவ்வழிப்  பண்  கொண்ட  பாடல்;  புன்  தலைப்  புனம்-
சிற்றிடம்  கொண்ட  புனங்களிலும்;  காப்புடைப்  பொங்கரில்- காவல்
உடைய   சோலைகளிலும்;   சென்று   இசைக்கும்-  பரந்து  சென்று
ஒலிக்கும்.

கொன்றைக்  கனியையும் மூங்கிலையும் துருவித் துளையிட்டுக்  குழல்
செய்வர்.   உறக்கும்-உறங்கச்   செய்யும்.  செவ்வழிப்    பண்  காலை
நேரத்துக்கு உரியது.

முல்லையும்     (கொன்றை)    மருதமும்    (கடைசியர்) நெய்தலும்
(நுளைச்சியர்)  கலந்த   திணை   மயக்கம்.  முன்றில்-இல்முன் என்தன்
போலி. உறக்கும்-பிறவினை.                                 34