நாட்டுப் படலம் - 55

bookmark

உழத்தியர் சிறப்பும் - வாளையின் மதர்ப்பும்

55.

வேளை வென்ற முகத்தியர் வெம் முலை,
ஆளை, நின்று முனிந்திடும், அங்கு ஓர் பால்;
பாளை தந்த மதுப்பருகி, பரு
வாளை நின்று மதர்க்கும் மருங்கு எலாம்.
 

அங்கு ஓர் பால்- அந்த மருத நிலத்தின் ஒரு பக்கத்தில்; வேளை
வென்ற   முகத்தியர்-  மன்மதனையும்  வெற்றி   கொண்ட முகத்தை
உடைய  (உழவர்  குலப்)  பெண்களின்; வெம்  முலை- விருப்பத்தைக்
கிளரச்   செய்யும்    மார்பகங்கள்:  ஆளை   நின்று  முனிந்திடும்-
ஆண்களைஎதிர்த்து நின்று பணியச்    செய்யும்;   மருங்கு  எலாம்-
பக்கங்களிலெல்லாம்;  பாளை  தந்த  மதுப் பருகி- பாளைகளிலிருந்து
வடியும்  மதுவைக்  குடித்து;  பரு  வாளை நின்று மதர்க்கும்- பெரிய
வாளை மீன்கள் விறைப்புடன் செருக்கும்.

மகளிர்     மார்பகம் நின்று   முனிந்த காட்சியொடு வாளை நின்று
மதர்த்திடும் காட்சியைப் பிணைத்து   நோக்க வேண்டும்; ‘நின்று’ என்ற
சொல்லை  ஈரிடத்தும்  பெய்து   இக்குறிப்பினைக்  கவிச் சக்கரவர்த்தி
தருகிறார்.  காம மயக்கந் தந்த   மதர்ப்பிலே மைந்தர் நிற்பதை வாளை
மீனிடத்துக்    குறிப்பாகப்     புலப்படுத்துகிறார்   கவிஞர்.   இரண்டு
காட்சிகளையும்  உதிரிகளாக    நினையாமல்,  இணைந்த காட்சிகளாகப்
பார்ப்பதில்தான்    மருதக்     காட்சி   செறிவுறுகிறது.   கவிதைக்கும்
கற்பனைக்கும்  குறிப்பிற்    சுட்டலே உயிர்நாடி என்பதை உணர்க. ஒரு
பால் காட்சி மருங்கெலாம்   மதர்ப்பாக விரிகிறது. மதர்த்தல்: களிப்பால்
செருக்குதல்.

‘வேளை      வென்ற   முகத்தியர்’ -காம விருப்பத்தைத் தருவதில்
மன்மதனையும்  வென்றவர்    என்பது  கருத்து.  வேள்: கருவேளாகிய
மன்மதன்;  மற்றவன்    செவ்வேள்.  ‘ஆள்’  மருத  நிலத்து  வேலை
செய்யும்  ஆண்கள்’   காமன்  நேர் வயங்கு முகத்தியர்’ என்ற வில்லி
பாரதத்  தொடர்   (வி.ப-14ஆம்  போர்  26)  காம  விருப்பம்  எழச்
செய்வதில்    மன்மதனும்  மகளிர் முகமும் சமமாவதை உணர்த்துகிறது.
பாளை  தேன்    சொரிவதை  முன்னும்  (40) குறித்தார். ‘பழனவாளை
பாளை  உண்டென’   (பரி  7:34)  என்ற  பழம்பாடலிலும்  இக்காட்சி
காணலாம்.

வேளையும்     என்ற    உயர்வுச் சிறப்பும்மை தொக்கது. வெம்மை
வேண்டல  (விருப்பம்)    என்பது தொல்காப்பியம் (தொல். சொல். உரி.
36).  ‘நின்று  மதர்க்கும்’    என்பதை  மதர்த்து  நிற்கும்’  என  முன்
பின்னாக  வைத்து  விகுதி    பிரித்துக்  கூட்டிப்  பொருள் கூறினாரும்
உளர்.                                                    24