நாட்டுப் படலம் - 56
எருமைப்பாலால் நெற்பயிர் வளர்தல்
56.
ஈர நீர் படிந்து, இந் நிலத்தே சில
கார்கள் என்ன, வரும், கரு மேதிகள்;
ஊரில் நின்ற கன்று உள்ளிட, மென் முலை
தாரை கொள்ள, தழைப்பன சாலியே.
ஈர நீர் படிந்து- குளிர்ந்த நீரிலே மூழ்கி எழுந்து; இந் நிலத்தே-
(வானத்தில் அல்லாது) இந்த நிலத்திலே; சில கார்கள் என்ன- சில
மேகங்களைப் போல; கரு மேதிகள் வரும்- கருமை நிறமுள்ள
எருமைகள் நடமாடும்; ஊரில் நின்ற- ஊரிலே தங்கிவிட்ட; கன்று
உள்ளி- கன்றை நினைப்பதாலே; மென் முலை தாரை கொள்ள-
மென்மையான மடியிலிருந்து பால் தாரை சொரிவதால்; சாலி
தழைப்பன- (அந்தப் பாலால்) செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன.
வானத்திலே கரு மேகம்; நிலத்திலே கரு மேதி -மேய வரும்போது
ஊரில் விட்டுவந்த கன்றை நினைத்த மாத்திரத்திலே பால் சொரிய,
அந்தப் பால் வெள்ளமெனப் பாய்ந்து, செந்நெற் பயிர்
தழைத்தனவாம். வீறுகோளணி என்பர். மேல் 44ஆம் பாடலிலும்
கன்றை நினைத்து எருமை பால் சொரியும் செய்தி வந்தது. 25
