நாட்டுப் படலம் - 53

bookmark

மள்ளர் கொள்ளும் பல்வகை வளங்கள்

53.

முந்து முக் கனியின், நானா முதிரையின்,
   முழுத்த நெய்யின்,
செந் தயிர்க் கண்டம், கண்டம்,
   இடை இடை செறிந்த சோற்றின்,
தம் தம் இல் இருந்து, தாமும்,
   விருந்தொடும், தமரினோடும்,
அந்தணர் அமுத உண்டி
   அயிலுறும் அமலைந்து எங்கும்.
 
எங்கும்-அந்த நாட்டில் எல்லா இடங்களிலும்; முந்து முக்கனியின்-
கனிகளில்  முதன்மையாக   எண்ணப்படுகின்ற வாழை, பலா, மா ஆகிய
முப்பழங்களுடனும்;    நானா    முதிரையின்-   பல்   வகைப்பட்ட
பருப்புகளுடனும்;  முழுத்த  நெய்யின்-  பரிமாறப்பட்ட  பொருள்கள்
முழுகும்படி   வார்த்த    நெய்யுடனும்;    செந்தயிர்க்    கண்டம்-
செந்நிறமுள்ள தயிர்க் கட்டிகளுடனும்; கண்டம் இடை இடை செறிந்த
சோற்றின்- கண்ட சருக்கரை இடையிடையே செறிந்துள்ள சோற்றுடனும்;
தம்  தம்  இல்  இருந்து-  தங்கள்   தங்கள்   வீட்டில்   இருந்து;
விருந்தொடும்   தமரினோடும்    தாமும்  -     விருந்தினருடனும்
உறவினருடனும்   கலந்து   தாங்களும்;  அந்தணர்  அமுத  உண்டி-
தேவர்களுக்கு    உரிய   அமுதம்   போன்ற  உணவினை;  அயிலும்
அமலைத்து- உண்ணுகின்ற ஆரவாரம் உடையது (அந்தக் கோசலம்)

‘மூட     நெய் பெய்து’ என்ற கோதையார் ஆட்சி கருதத்  தக்கது.
சிவப்பு   நிறம்  வரும்  வரையில்  காய்ச்சிய   பாலில்   பிரையிட்டது
செந்தயிர்.  ‘தாமும்  விருந்தொடும்   தமரினோடும்’   என்ற  செய்யுள்
தொடர்  இல்லறத்தார் முறைமை நோக்கி ‘விருந்தொடும்  தமரினோடும்
தாமும்’  என நிரல் மாற்றி உரை  கொள்ளப்பட்டது. அந்தணர் இங்கே
தேவர்.  ‘தம் இல் இருந்து தமது பாத்து’  உண்ணுதலும், தென்புலத்தார்
தெய்வம்,  விருந்து ஒக்கல், தான்’ என்று  அமைதலுமாகிய  திருக்குறள்
நெறியினை நினைவூட்டுவது இப்பாடல்.                         22