நாட்டுப் படலம் - 54
ஆண்வண்டு , மகளிர் கண்களைப் பெண்வண்டென
மயங்குதல்
கோசல நாட்டுச் செல்வப் பொலிவு
கலி விருத்தம்
54.
பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண் கணை, ‘ஒண் பெடை ஆம்’ எனக்
கருதி, அன்பொடு காமுற்று, வைகலும்,
மருத வேலியின் வைகின, வண்டுஅரோ.
வண்டு- (ஆண்) வண்டுகள்; பருவ மங்கையர்- இளம் பெண்களின்;
பங்கய வாள் முகத்து- தாமரை போன்ற ஒளிகொண்ட முகத்தில்
உள்ள; உருவ உண்கணை- அழகுடையனவும் மை
இடப்பட்டனவுமாகிய கண்களை; ஒண் பெடை ஆம் எனக் கருதி-
ஒளி கொண்ட பெண் வண்டுகள் என்று நினைத்து; அன்பொடு
காமுற்று- அன்போடு விரும்பி; கைகலும்- நாளெல்லாம்; மருத
வேலியின் வைகின- மருத நிலத்திலே தங்கின.
வண்டுகளைப் பெண்களின் கண்களுக்கு உவமை கூறுதல் மரபு;
அந்த இலக்கிய மரபை அடிப்படையாகக் கொண்டது இக் கற்பனை.
பெண்களின் கண்கள் என்பது தெரியாமல் பெண் வண்டுகள் எனக்
கருதி ஆண் வண்டுகள் நாளெல்லாம் காத்திருப்பதற்குக் காரணம்
தக்க செவ்வி/தருணம் வாய்க்க வேண்டும் என்பதே. இலவு காத்த கிளி
போல ஏமாறப் போவது தெரியாமல் மயங்கின. இது மயக்க அணி.
கணை + கண்ணை: தொகுத்தல் விகாரம் 23
