நாட்டுப் படலம் - 51
நெய்தல்நிலச் சிறப்பு
உழவர் வாழ்க்கை
51.
எறிதரும் அரியின் சும்மை
எடுத்து வான் இட்ட போர்கள்
குறிகளும் போற்றிக் கொள்வார்;
கொன்ற நெல் குவைகள் செய்வார்;
வறியவர்க்கு உதவி, மிக்க,
விருந்து உண மனையின் உய்ப்பார்,
நெறிகளும் புதைய, பண்டி நிறைத்து,
மண் நெளிய ஊர்வார்.
எறிதரும் அரியின் சும்மை-வாளால் அரியப்பட்ட நெல்லரிகளாகிய
சுமைகளை; எடுத்து- சுமந்து சென்று; வான் இட்ட போர்கள்- வானம்
அளாவிடக் குவித்த போர்களில்; குறிகளும் போற்றிக் கொள்வார்-
அடையாளம் இட்டுப் பாதுகாத்துக் கொள்வார்கள்; கொன்ற நெல்-
கதிரடித்து உதிர்த்த நெல்லை; குவைகள் செய்வார்- குவித்து
வைப்பார்கள்; வறியவர்க்கு உதவி- (களத்துமேட்டுக்கு வரும்)
ஏழைகளுக்கு நெல்லை உதவி; மிக்க- மீதியான தானியங்களை;
விருந்து உண மனையின் உய்ப்பார்- (தம்மோடு கலந்து) விருந்தினர்
உண்பதற்காக வீடுகளில் கொண்டு சேர்ப்பாராய்; நெறிகளும் புதைய-
போகும் வழிகள் புதையும்படியாக; பண்டி நிறைந்து- வண்டிகளில்
நிறைத்து; மண் நெளிய ஊர்வார்- நிலமே நெளியும்படியாகச் சுமை
ஏற்றி (வண்டிகளை)ச் செலுத்துவார்கள்.
சுமை என்பதன் விரித்தல் விகாரம் சும்மை. இரவு நேரத்தில்
நெற்கதிர்களை எவரும் எடுத்துவிட முடியாமல் நெற்போர்களில்
அடையாளம் இடுவது வழக்கம். சாணமும் மண்ணும் கலந்து போர்கள்
மீது அடையாளம் இடுவர். ‘குறிகளும் போத்தின் கொள்வார்’ என்பது
கம்பன் கழகப் பதிப்பில் காணும் பாடம்; அதற்குக் ‘குறிப்பின் வழியே
செல்லும் கடாக்களை மிதக்கச் செய்து நெல் கொள்வார்’ என்பது
பொருள். ‘குறிகொளும்’ என்று கொண்டால்தான் அப்பொருள்
பொருந்தும். வறியவர்க்கு உதவிய பின்னும் நெறிகள்
புதையுமளவுக்கும் நிலம் நெளியுமளவுக்கும் வண்டிகளில் சுமை
மிகுதியாயிருந்தது என்று சொன்னதால், கண்டு முதலின் மிகுதி
குறிக்கப்பட்டது. 20.
