நாட்டுப் படலம் - 46
கோசல நாட்டுத் தலைமக்களின் பொழுதுபோக்கு
மக்கள் பொழுதுபோக்கு
46.
பொருந்திய மகளிரோடு வதுவையில்
பொருந்து வாரும்,
பருந்தொடுன் நிழல் சென்றன்ன
இயல் இசைப் பயன் துய்ப்பாரும்,
மருந்தினும் இனிய கேள்வி
செவி உற மாந்துவாரும்,
விருந்தினர் முகம் கண்டு, அன்ன
விழா அணி விரும்புவாரும்.
பொருந்திய மகளிரோடு- எல்லா வகைப் பொருத்தங்களும் உள்ள
பெண்களுடன்; வதுவையில் பொருந்துவாரும்- மணவினையில்
பொருந்தியிருப்பவர்களும்; பருந்தொடு நிழல் சென்றஅன்ன-
பருந்தோடு அதன் நிழலும் தொடர்ந்து செல்வது போல; இயல்
இசைப் பயன் துய்ப்பாரும்- இயல் இசைத்த இசைப்பாடலை
அனுபவிப்பவர்களும்; மருந்தினும் இனிய- அமுதத்தை விட இனிமை
மிக்க; கேள்வி செவி உற மாந்துவாரும்- கேட்டறியும் நூலறிவினைச்
செவியிற் பொருந்த உண்டு அனுபவிப்பவர்களும்; விருந்தினர் முகம்
கண்டு- விருந்தினரின் முகத்தைப் பார்த்து; அன்ன விழா அணி
விரும்புவாரும்- உண்ணும் சோறு வழங்கும் விழாவின் சிறப்பை
விரும்புவாரும்
இச் செய்யுளோடு வாக்கியம் முற்றுப் பெறவில்லை; மேலும்
தொடர்கிறது (49 முடிய). இப்படி வரும் செய்யுளைக் குளகச் செய்யுள்
என்பர். ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய பொருத்தங்கள் பத்து என்று
தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. (தொல். பொருள்-பொருளியல் 25)
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு,
உருவு, நிறுத்த காம வாயில்,
நிறையே, அருளே, உணர்வொடு, திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே
என்பது தொல்காப்பிய விதி. இவ்வாறு கொள்ளாமல் தினம், கணம்,
மகேந்திரம், ஸ்திரீ தீர்க்கம், யோனி, ராசி, ராசியதிபதி, வசியம், ரச்சு,
வேதை எனச் சோதிட நூலார் கூறுவனவற்றைக் கொள்வாரும் உளர்.
பருந்தும் நிழலும் போலப் பாட்டும் (சாகித்தியம்) இசையும் (சங்கீதம்)
பொருந்திச் செல்ல வேண்டும்; இலக்கணம் (இயல்) அமைந்த
இசையை நுகர்வோர் அவ்விசையொடு கலந்து அனுபவிப்பதற்குப்
பருந்தும் நிழலும் உவமையாகக் கொள்ளலும் பொருத்தமே. மருந்து:
அமிர்தம். ‘கற்றில னாயினும் கேட்க’ என்றும் ‘கற்றலிற் கேட்டலே
நன்று’ என்றும் கேள்விச் செல்வம் சிறப்பிக்கப்படுதலின் ‘இனிய
கேள்வி’ என்றார். 15
