நாட்டுப் படலம் - 47

bookmark

கோழிப்போர்

47.  

கருப்புறு மனமும், கண்ணில்
   சிவப்புறு சூட்டும் காட்டி,
உறுப்புறு படையின் தாக்கி;
   உறு பகை இன்றிச் சீறி,
வெறுப்பு இல, களிப்பின் வெம் போர்
   மதுகைய, வீர வாழ்க்கை
மறுப்பட ஆவி பேணா வாரணம்
   பொருத்துவாரும்;
 
கறுப்புறு   மனமும்- சினம் மிகுந்த மனமும்; கண்ணில் சிவப்புறு
சூட்டும்-   கண்களைவிடச்   சிவந்த   கொண்டையையும்;  காட்டிப்-
புலப்படுத்தி; உறுப்புறு படையின் தாக்கி- காலில் கட்டிய கத்தியினால்
எதிர்க்கும்  சேவலைத்  தாக்கி;  உறு  பகை  இன்றிச் சீறி- தமக்குள்
முன்பகை இல்லாமலே சினம் காட்டி; வெறுப்பு இல- போர் செய்வதில்
வெறுப்பு இல்லாதவனாய்; வீர வாழ்க்கை மறுப்பட- வீர வாழ்க்கைக்கு
மாசு   உண்டாகுமாயின்;  ஆவி   பேணா  - உயிரையும் பெரிதாகப்
போற்றாத;     வாரணம்   -    சேவல்களை;    பொருத்துவாரும்-
போரிடும்படிச் செய்பவர்களும்.....

கறுப்பு:     சினம். ‘கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்’  என்பது
தொல்காப்பியம்.  (தொல்.  சொல்.  உரி. 74). சூடு: சேவல்   கொண்டை
உறுப்பு:  இங்கே  கால்களாகிய  உறுப்பு. உறுப்புறு படை   என்பதற்குக்
கால்களும்   மூக்கும்   ஆகிய  உறுப்புகள்  என்றும்    கொள்ளலாம்.
‘காலாயுதம்’ என்றே சேவலுக்கு ஒரு பெயருண்டு.                16