நகரப் படலம் - 162

bookmark

கொடிகளின் உயர்வு

கொடிகளும் தோரண வாயிலும் 
 
கலித்துறை
 
162.

நானா விதமா நளி மாதிர வீதி ஓடி.
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணுமாபோல்.
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்.
வான் ஆறு நண்ணி. புனல் வற்றிட நக்கும் மன்னோ.
 
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள்- அந்நகரின் குறைவில்லாத
மாடங்களின்  மீது ஆடுகின்ற கொடிகள்; நானாவிதமா   நளி  மாதிர
வீதி ஓடி - நாலாவிதமாகவும் பறந்து பெரிய  வான  வீதியிலே    ஓடி;
மீன் நாறு வேலைப்புனல்- மீன் நாறும் கடல் நீரினை; வெண்  முகில்
உண்ணுமா போல-  வெண்மை  நிறமுடைய   மேகங்கள்    பருகுவது
போல;  மீப்  போய் -  மேலே  சென்று;  வான் ஆறு   நண்ணி -
வானாறாகிய ஆகாய கங்கையை   அடைந்து; புனல்வற்றிட  நக்கும்-
அதன்  தண்ணீர் வற்றும்படி நக்கும்.

அந்த நகரத்து மாடங்களின் மீது ஆடும்  கொடிகள்  வானவிதியிலே
மேலே  சென்று  மேகங்கள்  கடல்  நீரைப்  பருகுவது  போல ஆகாய
கங்கையின்  நீர்  வற்றும்படி  நக்கும்  என்றார். நானா  விதமா:  நாலா
விதங்களிலும்.  ஆனாத:  குறையாத.  மீப்  போய்:   மேலே   சென்று.
வானாறு:  ஆகாய  கங்கை.  மன்னோ:  அசை.  கொடிகளின்  சிறப்பை
உயர்த்திக் கூறியதால் உயர்வு நவிற்சி அணி.                     70