நகரப் படலம் - 160

bookmark

சிலர் போர்க்கலை ஆராய்ச்சியால் பொழுதுகழித்தல்

160.

கரியொடு கரி எதிர் பொருத்தி. கைப் படை
வரி சிலை முதலிய வழங்கி. வால் உளைப்
புரவியில் பொரு இல் செண்டு ஆடி. போர்க் கலை
தெரிதலின். பொழுது போம்- சிலர்க்கு. அச் சேண் நகர்.
 
கரியொடு  கரி  எதிர் பொருத்தி -   யானையோடு   யானையை
எதிர்த்துப்  போர் புரியவிட்டு;  கைப்படை  வரி   சிலை   முதலிய
வழங்கிய -   கையில்   உள்ள   படைகளான    கட்டமைந்த   வில்
முதலியவைகளைப்  பயின்றும்;  வாள் உளைப்புரவிய-  நீண்ட  பிடரி
மயிரை  உடைய  குதிரைகளின்  மீது  ஏறிக்கொண்டுப்;   பொரு இல்
செண்டு ஆடி - ஒப்பற்ற  ‘செண்டு’  என்ற  பந்தாடியும்;  போர்கலை
தெரிதலின்-போருக்குரிய கலைகளைத் தெரிந்து  பயின்றும்;  அச்சேண்
நகர்- அந்தச் சிறந்த நகரத்தில்; சிலர்க்குப்  பொழுதுபோம்-  மற்றும்
சில பேருக்குப் பொழுது போகும்.

யானையுடன்    யானையை மோதவிடும்  வீர  விளையாட்டுகளிலும்.
வில்  முதலிய  படைப்பயிற்சி  செய்வதிலும்.  குதிரை  மீதேறிப்  பந்து
விளையாடுவதிலும்    போருக்குரிய    கலைகளைப்     பயில்வதிலும்
அந்நகரத்தில்   சிலருக்குப்  பொழுது  போகும்  என்றதால்    இங்குக்
குறிப்பிடப்படுபவர்கள்  போர்  வீரர்கள்  என அறியலாம்.   பொருத்தி:
பொருந்தச்  செய்து  (பிற  வினைப் பெயரெச்சம்). உளை:   பிடரிமயிர்.
செண்டு:  குதிரையில்  ஏறியாடு  பந்தாட்டம் (இதனை இக்   காலத்தார்
‘போலோ’ என்பர். தெரிதல்- அரிதல்.                          68