நகரப் படலம் - 161
சிலர் பொழுதுகழிக்கும் முறை
161.
நந்தன வனத்து அலர் கொய்து. நவ்விபோல்
வந்து; இளையவரொடு வாவி ஆடி. வாய்ச்
செந் துவர் அழிதரத் தேறல் மாந்தி. சூது
உந்தலின் பொழுது போம்- சிலர்க்கு. அவ் ஒள் நகர்.
நந்தனவனத்து அலர்கொய்து - நந்தனவனம் சென்று மலர்ந்த
மலர்களைப் பறித்தும்; நவ்வியபோல் வந்து - பெண்மானைப் போல
வந்து; இளையவரொடு வாவி ஆடி - தம்மை ஒத்த இள மகளிருடன்
பொய்கையில் நீராடியும்; வாய்ச்செந்துவர் அழிதர- தமது வாயின்
பவள நிறம் அழியுமாறு; தேறல் மாந்தி- தேனைப் பருகியும்; சூது
உந்தலின- தாயமாடும் முதலிய விளையாட்டுகளனைத்தும் ஆடியும்;
அவ்வொள் நகர் சிலருக்குப் பொழுது போம்- அந்த ஒளிமிக்க
நகரிலே வாழும் மற்றும் சிலருக்குப் பொழுதுபோகும்.
நந்தவனத்திலே மலர்கள் பறித்தும் மான் போல நடந்து இளம்
பெண்களுடன் பொய்கையில் நீராடியும் வாயின் செந்நிறம் மாற.
தேனைப் பருகியும் தாயமாடியும் சிலருக்குப் பொழுது போகும்
என்றதால் இங்குக் கூறப்படுபவர்இளமகளிர் என அறிகிறோம். சூது:
தாயமாடுதல். உந்தல்: ஆடுதல். செந்துவர்: பவளச் செம்மை. 66ஆம்
பாடல் தொடங்கி நான்கு பாடல்களில் நகர மாந்தரின் பலவகைப்
பொழுதுபோக்குக் கூறப்பட்டது. 69
