நகரப் படலம் - 147
யானையின் மதநீரால் பூமி குழைதல்
147.
தழல் விழி ஆளியும் துணையும் தாழ் வரை
முழை விழை கிரி நிகர் களிற்றின் மும் மத
மழை விழும்; விழும்தொறும், மண்ணும் கீழ் உறக்
குழை விழும்; அதில் விழும், கொடித் திண் தேர்களே.
தழல்விழி ஆளியும் துணையும்- நெருப்பென விழிக்கும் கண்களை
உடைய ஆண் சிங்கங்களும் துணையான பெண்சிங்கங்களும்;
தாழ்வரை முழை விழை- தங்குவதற்கு ஏற்றனவாகிய மலைக்
குகைகளை விரும்பும்; கிரி நிகர் களிற்றின் மும்மத மழைவிழும்-
மலை போன்ற யானைகளின் மதநீர் மழை பொழியும்; விழும் தொறும்
மண்ணும் கீழ்உற குழை விழும்- அவ்வாறு மழை சொரியும் தோறும்
நிலமும் ஆழமாகுமாறு சேறாகும்; அதில் கொடித்திண் தேர்கள்
விழும்- அந்தச் சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதை
யுண்ணும்
நெருப்பெழும் விழிகொண்ட ஆண் சிங்கமும் அதன்
பெண்சிங்கமும் தங்குவதற்கு ஏற்ற குகைகள் கொண்டது அம் மலை;
அந்த மலைபோன்ற யானைகளின் மும்மதமும் மழை போலப்
பொழிவதால் மண்ணொடு கலங்கித் தரை சேறாகும்; அந்தச் சேற்றிலே
தேர்கள் புதையுண்ணும். இப்பாடலின் செய்தி இது. ‘தழல் விழி
ஆளியும் துணையும் தாழ்வரை மழை விழை’ என்றநீண்ட தொடர்
கிரிக்கு அடை, தாழ்தல்: தங்குதல், மும்மதம்: கன்ன மதம், கபோல
மதம், பீஜ மதம். 55
