நகரப் படலம் - 144

bookmark

ஆடற்சதியை அளந்து காட்டுவன
குதிரைகளின் கிண் கிணி மாலை

பாடினி பாட. விறலின் ஆட
 
144.

பதங்களில் தண்ணுமை, பாணி, பண் உற
விதங்களின், விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே.
  
தண்ணுமை,   பாணி, பண், உற- மத்தள ஒலி, தாள ஓசை, பாட்டு
ஒலி  இவைகளுக்குப்  பொருந்த;  விதிமுறை  விதங்களின்-  நாட்டிய
நூல்முறைப்படி   பல   விதங்களாக;   பதங்களில்   சதிமிதிப்பவர்-
பாதங்களால்   சதிபெற  வைத்து  நடனம்  ஆடுபவர்கள்;  மதங்கியர்-
ஆடல்  பாடல்வல்ல  பெண்கள்  ஆவர்; அச் சதி வகுத்துக்காட்டுவ-
அந்தத்   தாளச்    சதியை  விவரித்துக்  காட்டுபவை;  சதங்கைகள்-
அப்பெண்கள்    கால்களில்  அணிந்துள்ள  சதங்கைகளும்;  அல்லன
புரவித்தாள்களே- அவ்வாறு ஆடுகின்ற குதிரைகளின் கால்களுமே.

அந்த     நகரத்துப்  பெண்களின் நாட்டியச் சிறப்பும், குதிரைகளின்
ஆட்டச்  சிறப்பும்    கூறப்பட்டன.  குதிரை  தாளத்துக்கேற்ப  ஆடும்
என்பதை  மேலே     (751)  எழுச்சிப் படலத்திலும் கூறுவார். பதங்கள்:
பாதங்கள்.  தண்ணுமை:    மத்தளம். பாணி: கைத்தலம். சதி: தாளஒத்து.
மதங்கியர்: ஆடு மகளிர்.                                    52