நகரப் படலம் - 143

bookmark

மாளிகைகளில் மகளிர் மேனியே இருளகற்றுதல்

143.

தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன,
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.
 
தணிமலர்த்     திருமகள்   - குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும்
இலக்குமி  தேவி;  தங்கும்  மாளிகை- தங்கியிருக்கும் அயோத்தி நகர
மாளிகைகள்; இணர் ஒளிபரப்பி நின்று- மிக்க ஒளி வீசி நின்று; இருள்
துரப்பன-இருளை ஓட்டுபவை; திணிசுடர் நெய்யுடைத் தீவிளக்கமோ-
செறிந்த ஒளியுடைய நெய்விளக்குகளின் விளக்கமோ; மணிவிளக்கல்ல-
மணிகளின் ஒளியோ அல்ல; மகளிர் மேனியே- அந்நகரத்து மகளிரின்
மேனி ஒளியே.

நெய்    விளக்கின் ஒளியும், மணிகளின் ஒளியும் ஆகிய இரண்டிலும்
மேலோங்கி      இருப்பது   மகளிரின்   மேனி   ஒளியே.   அதுவே
அந்நகரத்தின்     இருளை  நீக்குவது  எனக் கூறுகிறார். இருள் ஓட்டும்
இயல்பு   கொண்ட   விளக்கொளி,  மணியொளி  இரண்டையும்  நீக்கி
அவ்வியல்பை     மகளிர்    மேனிக்கு   ஏற்றிக்   கூறியதால்   இது
அவநுதியணியாம்.                                          51