நகரப் படலம் - 137

bookmark

மகளிர் பந்தாடல்

137.

பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சிலதியர்; ஆற்ற குப்பைகள்,
சந்திரன் ஒளி கெட, தழைப்ப தண் நிலா.
 
பந்துகள் பயிற்றுவார் மடந்தையர் இடை- பந்தாடுபவராகிய இளம்
பெண்களிடமிருந்து;      முத்தினம்         சிந்துவ-     (அவரது
அணிகலங்களிலிருந்து)     முத்துக்கள்      சிந்துகின்றன;     அவை
திரட்டுவோர்- அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும்;  அந்தம் இல்
சிலதியர்-   அளவில்லாத  பணிப்  பெண்கள்;  ஆற்று  குப்பைகள்-
குவித்த அந்த முத்துக்  குவியல்கள்;  சந்திரன் ஒளிகெட  தண் நிலா
தழைப்ப-  சந்திரனது   ஒளியும்  குறையுமாறு  குளிர்ந்த  நிலா  ஒளி
தழைப்பனவாம்.

பெண்கள்     பந்து விளையாடும் இடங்களில் அணிகலன் முத்துகள்
சிதறி     விழ.   பணிப்பெண்கள்   அவைகளை  எல்லாம்  சேகரித்து
ஆங்காங்கு    குவித்து வைக்கின்றனர். அந்தக் குவியல்கள் சந்திர ஒளி
கெடுமாறு- வெண்மைநிற ஒளியை உடையனவாய் விளங்குகின்றன.

பயிற்றுவார்: ஆடுகின்ற  மகளிர் தன் வினைப் பொருளில் வந்த பிற
வினையாலணையும் பெயர். சிலதியர்: குற்றேவல் மகளிர்.

‘ஆற்றின்’   என்ற  பெயரெச்சத்தின்   இன்  என்னும்  இடைநிலை
தொக்கு, ‘ஆற்ற’ என நின்றது.                               45