நகரப் படலம் - 138
நடனமாதர் கண்பட்டுக் காண்பார்க்கு உயிர்
மெலிதலும் காதல் வளர்தலும்
138.
அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ; மற்று, அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன; வளர்வது, ஆசையே.
அரங்கிடை மடந்தையர் ஆடுவார்-நடன அரங்குகளிலே பெண்கள்
நடனம் ஆடுவார்கள்; அவர கருங் கடைக்கண் அயில்- அவர்களின்
கருமையான கடைக்கண்களாகிய வேல்கள்; காமர் நெஞ்சினை
உருங்குவ- காதல் மிக்க ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம்;
மற்று அவர் உயிர் அன்னவர் மருங்குல் போல்- பின்னும்
அவ்வாடவரின் உயிர்கள் அப்பெண்களின் இடைகளைப் போல;
தேய்வன- மெலிவனவாகும்; வளர்வது ஆசை- அந்த மைந்தர்களுக்கு
அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும்.
நடன அரங்கில் நடனமாடும் மகளிரின் பார்வை அவர்களது
காதலர்களான ஆண்களின் உயிரை உண்ணும். அம்மைந்தர்தம் உயிர்
அம்மகளிரது இடையென மெலியும். ‘உறங்குவ’ என்பது ‘உருக்குவ’
என்பதன் மெலித்தல் விகாரம். உருங்குதல்: உண்ணுதல் என்றும்
பொருள் கொள்ளலாம். இதனை “அரவின் உடலுயிர் உருங்குவணம்”
என்று பரிபாடலாலும் (பரி. 4: 42) அறியலாம். 46
