நகரப் படலம் - 130
மாளிகையின் கொடிகள் தேய்ப்பதால் மதி தேய்தல்
130.
காண் வரு நெடு வரைக் கதலிக் கானம்போல்,
தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன;
வாள் நனி மழுங்கிட மடங்கி, வைகலும்
சேண் மதி தேய்வது, அக் கொடிகள் தேய்க்கவே.
நெடுவரை காண்வரு- பெரிய மலைகளில் காணப்படும்; கதலிக்
கானம் போல்- வாழை மரங்களை உடைய தோப்பைப் போல; தாள்
நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன- கொடிமரங்கள் நீண்ட
கொடிகளின் தொகுதி மிகுந்துள்ளன;; சேண்மதி வாள்நனி மழுங்கிட
மடங்கி- வானத்திலுள்ள சந்திரன் தன் ஒளிமிக மழுங்கி வளைந்து;
வைகலும் தேய்வது- நாள்தோறும் தேய்ந்து போவது; அக்கொடிகள்
தேய்க்கவே- அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான்.
நகரத்துக் கொடிகள் பெரிய மலைகளில் காணப்படும் வாழை
தோப்பை போலக் காணப்படும்; வானத்தில் உள்ள சந்திரன் ஒளி
குறைந்து வளைந்து நாள்தோறும் தேய்ந்து காணப்படுவது
அக்கொடிகள் சந்திரனுன் மீது உராய்வதனாலேயே என்றார். சந்திரன்
தேய்பிறையில் தேய்வதற்குக் காரணம் கற்பித்துக் கூறியதால் இது
ஏதுத் தற்குறிப்பேற்ற அணி. 38
