நகரப் படலம் - 131
அயோத்தி நகரெங்கும் மாடமாளிகைகளும்
கூடகோபுரங்களும் அமைந்தமை
மாட மாளிகைகளின் ஒளியும் மணமும்
131.
பொன் திணி மண்டபம் அல்ல, பூத்தொடர்
மன்றுகள்; அல்லன மாட மாளிகை;
குன்றுகள் அல்லன மணி செய் குட்டிமம்;
முன்றில்கள் அல்லன முத்தின் பந்தரே.
பொன்திணி மண்டபம் அல்ல- பொன்னால் கட்டிய மண்டபம்
அல்லாதவை; பூத் தொடர்- மலர்களால் அமைந்த மண்டபங்களாம்;
மன்றுகள் அல்லன- பலர் கூடுமிடமாகக் கட்டிய பொது மன்றங்கள்
அல்லாதவை; மாடம் மாளிகை- மேன்மாடியோடு அமைந்த
மாளிகைகளாம்; குன்றுகள் அல்லன- செய் குன்றுகள் அல்லாதவை;
மணி செய் குட்டிமம்- இரத்தினங்களைக் கொண்டு அமைத்த
முற்றங்களாம்; முன்றில்கள் அல்லன- முற்றங்கள் அல்லாதவை;
முத்தின் பந்தரே- முத்துப் பந்தல்களேயாகும்.
அந்நகரத்தில் பொன் மண்டபங்களும், மலர்மண்டபங்களும்
பொதுமன்றங்களும், செய் குன்றுகளும், மணி மேடைகளும், முத்துப்
பந்தல்களும் எங்கும் காணப்பட்டன; வெற்றிடங்களே இல்லை
என்கிறார். இது முதல் நான்கு பாடல்களில் மாட மாளிகைகளின்
ஒளியும் மீண்டும் கூறப்படுகிறது. குட்டிமம்: முன்றில்கள் (தளவரிசை
செய்த தரை). மன்று: பொது மன்றங்கள். மாடம்: உப்பரிகை. குன்று:
செய்குன்று (கட்டு மலை எனவும் கூறுவர்). 39
