நகரப் படலம் - 128
மாளிகைகளிற் சூலங்கள் மின்வரிசைபோலுதல்
கொடிகளின் காட்சி
128.
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின,
முகிலொடு வேற்றுமை தெரிகலா, முழுத்
துகிலொடும் நெடுங் கொடிச் சூலம் மின்னுவ;-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.
அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின- அகிலின்
செழுமையான புகை மாளிகை எங்கும் கலந்தவைகளாய்; முகிலொடு
வேற்றுமை தெரிகலா- மேகத்துடன் வேற்றுமை அறிய முடியாத;
முழுத்துகிலொடு- பெரிய கொடிகளுடன்; நெடுங்கொடிச் சூலம்
மின்னுவ- நீண்ட கொடி மரங்களின் நுனியில் நாட்டப்பட்ட சூலங்கள்
ஒளிர்பவை; பகல் இடு மின் அணிப் பரப்புப்போன்ற- ஒளி வீசும்
மின்னல் வரிசையின் பரப்பை ஒத்திருந்தன.
அகிற் புகையுடன் கலந்த கொடிகள் மேகத்தை ஒத்தும், அவை
கட்டப்பட்ட கொடி மரத்தின் நுனியில் பொருந்திய சூலங்கள்
மின்னுவது மின்னலை ஒத்தும் காணப்பட்டன. தற்குறிப்பேற்றவணி.
மின் அணி: மின்னல் வரிசை, மாளிகைகளில் இடிதாங்கும்
பொருட்டும் அழகுக்காகவும் சூலம் பொருத்துவர் ஒப்பு: திருச்சிற். 222
36
