நகரப் படலம் - 121
121.
வயிர நல் கால் மிசை, மரகதத் துலாம்,
செயிர் அறப் போதிகை, கிடத்தி, சித்திரம்
உயிர்ப் பெறக் குயிற்றிய, உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன, அளவு இல் கோடியே.
வயிர நல்கால் மிசை- வயிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே;
மரகதத் துலாம்- மரகதத்தாலாகிய உத்தரத்தை; செயிர் அறப்
போதிகை கிடத்தி- குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது
பொருத்தி; சித்தரம் உயிர் பெறக் குயிற்றிய- ஓவியங்கள் உயிருள்ளன
போலத் தோன்றுமாறு செய்தனவும்; உம்பர் நாட்டவர் அயிர் உற
இமைப்பன - தேவ நாட்டவரும் (தமது விமானமோ என)
ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள்; அளவில் கோடியே-
அளவற்ற கோடிக் கணக்கானவையாகும்.
அயோத்தி மாநகரின் மாளிகைகள் அளவற்றன என்கிறார்.
துலாம்- உத்தரக் கட்டை
போதிகை- தூண்களின் தலையில் பாரம்தாங்கும்படி வைக்கப்படும்
கட்டை. இரு பாலும் கீழ்நோக்கிய வாழைப்பூ வடிவம்
அமைந்திருக்கும்.
அயிர்- ஐயம்; வயிரம்- காழ்த்தல் 29
