நகரப் படலம் - 117

bookmark

117.

மரகதத்து இலங்கு போதிகைத்
   தலத்து வச்சிரம்
புரை தபுத்து அடுக்கி, மீது பொன் குயிற்றி,
   மின் குலாம்
நிரை மணிக் குலத்தின் ஆளி நீள்
   வகுத்த ஒளிமேல்
விரவு கைத்தலத்தின் உய்த்த
   மேதகத்தின் மீதுஅரோ
 
மரகதத்து     இலங்கு போதிகைத் தலத்து- மரகதத்தால் செய்த
விளங்கு  போதிகைக்  கட்டைகளின்;  வச்சிரம் புரைதபுத்து அடுக்கி-
வைரக்  கற்களைக் குற்றமகற்றி அடுக்கி வைத்த; மீது பொன் குயிற்றி-
மேலே  பொன்தகட்டை  வைத்து; மின்குலாம் நிரைமணிக் குலத்தின்
வகுத்த-   மின்னல்     போல   விளங்கும்  வரிசையான  இரத்தினத்
தொகுதியால்  ஆகிய;  நீள் ஆளி ஒளி மேல்- நீண்ட சிங்க உருவின்
வரிசை  மீது;  விரவு கைத்தலத்தின்  உய்த்த-  ஒழுங்கு பொருந்திய
கைமரமாக வைக்கப்பட்ட; மேகத்தின் மீது- கோமேதத்தின்மேலே

முன்பாட்டில்     கூறிய  வைரத்தூண்களின்   மீது மரகதத்தாலான
போதிகைகளை  அமைத்து  வச்சிரக்   கற்களை  வரிசையாக அடுக்கிப்
பதித்து- அதன் மேலே பலவகை   மணிகளைப்  பதித்துச் செய்யப்பட்ட
சிங்க  வடிவங்களை  அழகுக்காக    வைத்து அதன் மேல் கோமேதகக்
கைகளை அமைத்துத் தளப்படுத்தி என்பது கருத்து.

ஒளி:  வரிசை. ஆளி:  சிங்கம்.  மேதகம்:  கோமேதகம்.  மின்குலம்:
மின்னற் கூட்டம். புரை தபுத்து: குறை நீக்கி.                     25