நகரப் படலம் - 118
118.
ஏழ் பொழிற்கும் ஏழ் நிலத்தலம்
சமைத்ததென்ன, நூல்,
ஊழ் உறக்குவித்து அமைத்த உம்பர்
செம்பொன் வேய்ந்து, மீச்
சூழ் சுடர்ச் சிரத்து நல் மணித்
தசும்பு தோன்றலால்,
வாழ் நிலக்குலக் கொழுந்தை
மௌலி சூட்டியன்னவே.
ஏழ்பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன- ஏழு
மேலுலகத்தவருக்கும் ஏழு இடங்களை ஏற்படுத்தி வைத்தது போல
(ஏழு கிளைகள்); நூல் ஊழ் உறக் குறித்து அமைத்த- சிற்ப நூல்
விதிப்படி ஆராய்ந்து அமைத்தனவான கோபுரங்கள்; உம்பர்
செம்பொன் வேய்ந்து- மேலே செம்பொன் தகடு வேயப்பட்டு; மீ சூழ்
சுடர்ச் சிரத்து- மேலுலகிலே சென்று ஒளிரும் சிகரத்திலே; நல் மணித்
தசும்பு தோன்றலால்- சிறந்த மாணிக்கக் கலசம் தோன்றுதலால்; வாழ்
நிலக் குலக் கொழுந்தை- வாழுகின்ற பூமியாகிய இளம் பெண்ணை;
மௌலி சூட்டி அன்ன- முடி சூட்டியது போலத் திகழும்.
ஏழுநிலை அமைந்து, முற்றுப் பெற்ற கோபுரங்கள் கலசம்
நிறுவப்பட்டு விளங்குவது. நில மகளுக்கு முடிசூட்டி அலங்கரித்தது
போலத் திகழும் என்றவாறு; ஏழ் பொழில்- ஏழு மேலுலகத்தில்
உள்ளவர்களைக் குறிக்கும்; நூல்- இங்கே சிற்ப நூலைக் குறித்தது;
சிரத்து- சிகரத்திலே; தசும்பு- கலசம்.
அயோத்தி நகரத்து கோபுரங்களைப் பூமி தேவிக்குச் சூட்டிய
மணிமுடியாகியச் சிறப்பிக்கும் நயம் மகிழ்தற்குரியது. மூன்றுபாடல்கள்
எழுநிலைமாடச் சிறப்பைக் கூறுவனவாகும். 26
