தொல்காப்பியம்

bookmark

தொல்காப்பியம் தொன்னூல் மட்டுமல்லாமல் பண்டைத் தமிழ் நாகரிகத்தைப் பண்பாட்டை மரபைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாகும்.

"தொல்காப்பியம் நெடுகலும் "என்மனார் புலவர்’ "நுண்ணிதின் உணர்ந்தோர்’ "மொழிப’ "என்றிசினோரே’ "நுனித்தகு புலவர் கூறிய நூலே’ என்று முடித்திருப்பதால், தொல்காப்பியம் கூறும் இலக்கணச் செய்திகளெல்லாம் முந்து நூல்களில் கண்டவையே என்பது தெளிவு”.

"செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலந்தொகுத் தோனே போக்கறு பனுவல்" - சிறப்புப் பாயிரம்.

என்னும் பாயிரச் சூத்திரத்தினால், பழந்தமிழகத்தில் நூல்கள் பல பல்கியிருந்தன எனலாம். அவ்வகை நூல்களைக் கற்றறிந்து வரன்முறைகளை ஆராய்ந்து தொகுக்கப் பெற்ற நூலாகத் தொல்காப்பியமாக இலங்குகிறது.

தொல்காப்பியம் இயற்றுவதற்குத் திட்டமிடுதல்

ஒரு செயலைச் செய்வதற்குப் பொருள்கள் (திருக்.675) தேவைப்படுவதைப் போலத் தொல்காப்பியம் இயற்றுவதற்குத் தேவையாயிருந்த "பொருள்கள்’ தமிழ் மருத்துவத்தின் தொன்மைகள் மூலப்பொருளாக அமைந்துள்ளன.

தமிழ் மருத்துவர் மருந்து, வாதம், ஓகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப்பொருள்களைக் குறியீடுகளாகக் குறித்தனர். அக்குறியீடுகள் தொல்காப்பியத்தில் அமைப்பு எண்களாக அமைந்துள்ளன.

தமிழ் மருத்துவத்தின் குறியீட்டு எண்கள் உடலியலைச் சுட்டுகிறது. அதைப் போலத், தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய அதிகாரங்களை மூன்றாகக் கொண்டுள்ளது.

"மூன்றே பொருளாய் முடிந்தது அண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது பிண்டம்
மூன்றே பொருளாய் முடிந்தது மருந்து
மூன்றே பொருளாய் முடிந்தது வாதமே"

- திருமந்திரம்.

அண்டம், பிண்டம், மருந்து, வாதம் ஆகியவை நான்கும் மூன்று பொருளாய் முடிந்தது என்கிறது, தமிழ் மருத்துவம். அந்த மூன்று மூலப்பொருள்களைக் கருத்திற்கொண்டு தொல்காப்பியத்தின் அதிகாரங்கள் மூன்றாக அமைந்தன.

மனித உடற்பகுதிகளில் தொடர்புடைய விண்மீன்களின் எண்ணிக்கை இருபத்தேழு என்பதால், அவ்வெண்கள் தொல்காப்பிய இயல்களின் எண்களாகக் கொள்ளப்பட்டன.

(இந்திய அணுக்கூடத்தில் ஒரு நியூட்ரானைக் கொண்டு ஒரு யுரேனியம் இடிக்கப்படுகிறது. அவ்வாறு இடிக்கப்படும் யுரேனியம், 1 > 3 > 9 > 27 > 81 > என நியூட்ரானை உருவாக்கிக் கொண்டே செல்கிறது. இந்த அணுச்செயலைப் போலவே தொல்காப்பியத்தில் 1 > 3 > 9 > 27 என்று அதிகாரங்களும் இயல்களும் அமைந்துள்ளன.)
~~chapter~~11
~~title~~எழுத்துகள் தோன்றுமிடம்
~~page_heading~~எழுத்துகள் தோன்றுமிடம்

எழுத்துகள் தோன்றுமிடமே உயிர் இயங்குமிடமாகும். எழுத்தும் இசையும் தோன்றுமிடம் ஒன்றேயாகும். 5 மூலாதாரத்திலிருந்து எழுகின்ற எழுத்தின் ஒலியை இசை என்றும் பண் என்று பஞ்சமரபு கூறுகிறது.

"எழுத்தெனப் படுப
அகரமுத னகர விறுவாய்
முப்பஃ தென்ப" - நூன்மரபு. 1

அகரம் தானும் இயங்கித் தனிமெய்களை இயக்குதற் சிறப்பான் முன் வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது என்பர் (இளம்பூரணம். பக்.26)

உடல் இயங்குவதற்கு ஏதுவாகிய அகரத்தை தொடக்கத்திலும், வீடு பேறடையும் ஆண்பாலைக் குறிக்கும் னகரத்தை இறுதியிலும் கொண்ட எழுத்துகளின் வைப்புமுறை அமைந்துள்ளதால் தொல்காப்பியம் ஓக முறைகளையே முதலாகக் கொண்டுள்ளது எனலாம்.

தமிழ் எழுத்துகள் முப்பது என்னும் அவ்வெண், திங்கள் ஒன்றுக்குரிய நாள்களைக் குறிப்பதாகும். உடம்பிலுள்ள உயிர் அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் உள்ள முப்பது நாள்களும் உடலில், "அமுத நிலைகள்’ என்னும் உயிரின் சுழற்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது, அதன் சுழற்சி, ஒவ்வொரு நாளும் உடற்பகுதி ஒவ்வொன்றிலும் நின்று செல்லும் என்று தமிழ் மருத்துவம் குறிப்பிடுகிறது. உயிரின் சுழற்சியை குறிக்கும் நாள்களின் எண்ணிக்கையைக் குறிக்க எழுத்துகள் முப்பதாக அமைந்துள்ளன எனலாம்.

உயிரெழுத்து ஒலிகள்:
    
(ச ரி க ப த என்னும் ஐந்து ஒலிகளையும் ச ரி க ம ப த நி என்னும் ஏழு ஒலிகளையும் சேர்த்து பன்னிரண்டு ஒலிகள் இசையொலிகளாகக் கொள்ளப்படுகின்றன)

அ இ உ எ ஒ ஆகிய ஐந்து குற்றொலிகளையும் ஆ ஈ ஊ ஏ ஓ ஐ ஔ ஆகிய ஏழு நெட்டொலிகளையும் சேர்த்து உயிரொலிகளைப் பன்னிரண்டு எனத் தொல்காப்பியம் குறிக்கிறது.

குற்றொலி ஐந்தாகும் போது நெட்டொலியும் ஐந்தாகவே இருக்க வேண்டும்.

உள்ளங்கை இரண்டு உடையவர்க்குப் புறங்கையும் இரண்டாகத்தாம் இருக்கும். நான்காக முடியாது என்று நச்சினார்க்கினியர் விளக்குகிறார்.

"எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்” (புணரியல். 141)

உயிரும் உயிரும் புணருமிடத்து உடம்படுமெய் வடிவு தோன்றும் என்று இலக்கணம் வகுக்கும் தொல்காப்பியம், அ+இ = ஐ என்றும், அ+உ = ஔ என்றும் கூறப்பட்டதன் காரணம் யாதெனின், உயிரெழுத்தின் எண்ணிக்கை பன்னிரண்டாக அமைய வேண்டும் என்பதுவே யாகும். 6 உயிர் என்றாலே பன்னிரண்டு தான். அதாவது, உடம்பில் உயிர் நிலைத்திருக்க வேண்டுமென்றால், சூரிய கலையில் சுவாசத்தின் அளவு பன்னிரண்டாக அமைய வேண்டும்.

தமிழ் மருத்துவம் குறிப்பிடும் சூரிய கலையின் அளவு உயிரோட்டத்தின் அளவாகக் கருதிக்கொண்டு உயிரெழுத்துகள் பன்னிரண்டாக அமைக்கப்பட்டுள்ளன. உடம்பினுள் இயங்கும் சந்திரன், சூரியன், அக்கினி ஆகிய மூன்று கலைகளும் பதினாறு, பன்னிரண்டு, பத்து எனும் அளவுகளைக் கொண்டுள்ளன என்று மருத்துவம் குறிப்பிடுகிறது.

உயிரும் மெய்யும்:

உயிரும் உடலும் நாள் ஒன்றுக்கு விடுகின்ற மூச்சின் எண்ணிக்கை 21600 ஆகும். இதுவே, உயிரெழுத்தையும் மெய்யெழுத்தையும் பெருக்கினால் கிடைக்கின்ற எண்களாகும்.

12 x 18 x 100 = 21600

தமிழ் மருத்துவம் கூறும் உயிர் உடல் ஆகிய இரண்டின் இயக்கத்தை அறிந்தே தொல்காப்பியம் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையை அமைத்துள்ளது எனலாம்.

சார்பெழுத்து:

எழுத்துகள் உயிர், மெய், சார்பு என மூன்று வகை என்றும், உயிரையும் மெய்யையும் சார்ந்து வருபவை சார்பெழுத்து என்றும் உரைக்கப்படுகிறது. சார்பெழுத்துகள் மூன்றும் உயிரையும் உடம்பையும் சார்ந்து இயங்குகின்ற வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று வளி இயக்கங்களைக் குறிப்பவையாகும்.

அவை போல், மெய்யெழுத்துகள் ஆறு ஆறு எழுத்தாக வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவாகப் பிரிக்கப்படுகின்றன. அவை உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் அவற்றின் இடையே ஊர்ந்து செல்லும் இடகலை, பிங்கலை, சுழுனை என்னும் மூன்று நாடிகளையும் உடலின் தன்மைகளான வன்மை, மென்மை, இடைமை எனக் குறிக்கின்றன.

எட்டு என்னும் எண்ணிக்கை:

வனப்பு, மெய்ப்பாடு, உணவுப்பொருள் போன்றவை எட்டுவகையெனக் குறிக்கப்படுகின்றன. மெய் படும் பாடே மெய்ப்பாடு என்பதால், இவை அனைத்தும் உடலைச் சார்ந்தே உரைக்கப் பட்டவை.

உடலின் அளவும் உடலின் விருப்பும் வெறுப்பும் எட்டு. உடலோடு தொடர்புடைய எல்லாம் எட்டு என்பதால் வனப்பும் மெய்ப்பாடும் உணவும் எட்டாகக் கூறப்பட்டன. எட்டை அடிப்படையாகக் கொண்டே பழந்தமிழ் அளவுகள் அமைந்துள்ளன.

தமிழ் மருத்துவத்தில் எட்டு என்பது ஓர் அடிப்படைக் கணக்காகும். மருத்துவப் பொருள்களை எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்தாகும். இல்லாவிட்டால் விருந்தாகும்.

"சொல்லிய நாழி கொண்டு
தூணியில் எட்டொன் றாக்கி
நன்னீர் விட்டே எட்டொன்றாய்
நாடிக் காய்ச்சிக் கொள்வீரே." - மேகநோய் நிதானம். 16-17

இவ்வாறு கண்டறியப் பெற்ற எட்டின் தத்துவம் மருந்துக்கு மட்டுமல்ல. மற்ற எல்லாவற்றுக்கும் பொருந்தும். சாதாரணமாகக் குடிக்கப் பயன்படுகின்ற வெந்நீர், எட்டுக்கு ஒன்றாகக் காய்ச்சினால் மருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது.

"இயம்பிட எளிதே வெந்நீர் இயம்புவன் சிறிது கேண்மின்
நயம்பெறத் தெளிந்த நீரை நன்றாக வடித்தெ டுத்துச்
சயம்பெற எட்டொன்றாக்கித் தான் குடித்திடுவீ ராகில்
வயன்பெறு பித்த வாத சொப்பனம் மாறும் மெய்யாய்"

என்று எவ்வகை மருந்துப் பொருளையும் சேர்க்காமல் தண்ணீரை மருந்தாக மாற்றும் முறையைக் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறாக பண்டைய காலத் தமிழர்கள் கலையிலும் கல்வியிலும் சிறந் திருந்ததைப் போல மருத்துவத்திலும் சிறந்திருந்தார்கள்.