தைலம் ஆட்டு படலம் - 1954
1954.
முடிவுற, இன்னன மொழிந்த பின்னரும்,
அடி உறத் தழுவினன், அழுங்கு பேர் அரா
இடி உறத் துவளுவது என்னும் இன்னலன்;
படி உறப் புரண்டனன்; பலவும் பன்னினான்.
முடிவு உற - தன் கருத்து (இராமனை மீள அழைத்துச் சேறலே
என்பது) முடிவாகத்தெரியும்படி; இன்னன - இந்த வார்த்தைகளை;
மொழிந்த பின்னரும் - சொல்லியபிறகும்; இடி உற - இடி ஒலி கேட்டு;
அழுங்கு பேர் அரா - மனம் வருந்தும்பெரும்பாம்பு; துவளுவது -
துடித்துச் சோர்கின்றது; என்னும் - என்றுசொல்லத்தக்க; இன்னலன் -
துன்பம் உடையவனாய்; அடி உறத் தழுவினன் -இராமனது கால்களை
நன்கு பற்றிக்கொண்டு; பலவும் பன்னினான் - பலவார்த்தைகளையும்
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு; படிமிசைப் புரண்டனன் -
பூமியில் விழுந்து புரண்டான்.
இராமன் திரும்பி வருபவனாகத் தோன்ற வில்லை யாதலின் சுமந்திரன்
வருத்தம்பெரிதாயிற்று. பன்னுதல் - ஒன்றையே திரும்பத் திரும்பச்
சொல்லுதல். 25
