தைலம் ஆட்டு படலம் - 1955
சுமந்திரனை எடுத்துத் தழுவி இராமன் கூறுதல்
(1955-1967)
துயர் மிகுதியுற்ற சுமந்திரனை இராமன் எடுத்து அணைத்துப் பேசுதல்
1955.
தடக் கையால் எடுத்து,
அவன் - தழுவி, கண்ண நீர்
துடைத்து, வேறு இருத்தி,
மற்று இனைய சொல்லினான் -
அடக்கும் ஐம் பொறியொடு
கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு
அணுகும் காட்சியான்.
அடக்கும் ஐம்பொறியோடு - (புலன்வழிச் செல்லாது) அடக்கிய
ஐம்பொறிகளோடு;கரணத்து அப்புறம் - அந்தக்கரணமாகிய மன
முதலியவற்றுக்கு அப்பால்; கடக்கும் -கடந்து செல்கின்ற; வால்
உணர்வினுக்கு - தூய மெய்ஞ்ஞானத்துக்கு; அணுகும் காட்சியான் -
நெருங்கிப் புலனாகின்ற தோற்றம் உடைய பரம்பொருளாகிய இராமன்;
அவன் - அந்தச் சுமந்திரனை; தடக்கையால் எடுத்து - (தனது) பெரிய
கைகளினால்தூக்கி; தழுவி -; கண்ணநீர் - கண்ணிலிருந்து வரும் நீரை;
துடைத்து -; வேறுஇருத்தி - தனியாக இருக்கவைத்து; இனைய -
இத்தகைய (பின்வரும்) சொற்களை; சொல்லினான் - சொன்னான்.
பொறிபுலன்களுக்குஅப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும் கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கேபுலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள் என்பது கூறப்பட்டது. வனவாசத்தை ஒப்புக்கொள்ளாதகருத்தினன் சுமந்திரன் ஆதலால், அவனை இசைவித்துத் திருப்பி அனுப்பவேண்டித் தனியேஅழைத்துச் சென்று பேசினான் இராமன் என்க. 26
