தைலம் ஆட்டு படலம் - 1945
1945.
குங்கும மலைக் குளிர் பனிக்
குழுமி என்னத்
துங்க முலையில் துகள்
உறச் சிலர் துயின்றார்;
அங்கை அணையில், பொலிவு
அழுங்க, முகம் எல்லாம்
பங்கயம் முகிழ்த்தன எனச்
சிலர் படிந்தார்.
சிலர் -; குங்கும மலைக் குளிர் பனிக் குழுமி என்ன - குங்கும
மலையிலேகுளிர்ந்த பனி திரண்டது போல; துங்க முலையில் - தூய
தனங்களில்; துகள் உற -மணற்பொடி பரவ; துயின்றார் - தூங்கினர் ;
சிலர்-; அங்கை அணையில் -தமது அழகிய கையாகிற அணையிலே;
முகம் எல்லாம் - தங்கள் முகம் எல்லாம்; பொலிவுஅழுங்க - ஒளி
மலர்ச்சி வாட; பங்கயம் முகிழ்த்தன என - தாமரை மலர்கள்
குவிந்துள்ளன என்று கருதும்படி ; படிந்தார் - கிடந்து தூங்கினார்கள்.
சிவந்த நகில்கள் வெண்மணல் துகள் பரவியிருப்பது குங்கும
மலையில் பனி குழுமியது போலும்என்றார். பெரும்பாலும் ஆடவரினும்
மகளிரே. அதிகம் துன்பத்தில் துவளுவர் ஆதலின் அவர்களது
துயரத்தையே மிகுதியாக இங்குக் காட்டினார். 16
