தேவ, அசுர, மனித, தோற்றம்
தேவ, அசுர, மனித, தோற்றம் பஞ்சபூதங்களினால் தோன்றிய இந்த அண்டமானது ஒரு நீர்க்குமிழி போல கணப்பொழுதில் தோன்றியது. தோன்றிய இந்த அண்டமானது கிரமக் (கிரமம் - முறைப்படி, ஒழுங்காக ) கிரமமாக அபிவிருத்தி ஆகாமல் இருந்தது. இவ்விதமாக பிரகிருதியினாலே உண்டான அதிவிசாலமான, பிரம்மாண்டமான பிரகிருதி சரீரகாரகனான ஸ்ரீவிஷ்ணு பகவானின் லீலா ஸ்தானமாய்மகா ஜலத்திலேயே மிதந்து கொண்டிருந்தது.இவ்விதமாக பிறந்த பிரம்மாண்டமான பிரகிருதி சொரூபனும், மகத்தகங்கார தன்மாத்திரா மகாபூத சரீரகனும், ஜெகதீஸ்வரனான விஷ்ணுதேவர் சதுர்முக சொரூபமாக தானே அவதரித்தார்.இவ்விதமாக தோன்றியிருக்கக்கூடிய அண்டத்திற்கு மேரு மலையானது உல்ப்பமாகவும், மற்ற மலைகள் யாவும் ஜராயுவாகவும் சமுத்திரங்கள் யாவும் கர்ப்போதமுகமாகும்.இவ்விடத்தில் உல்ப்பம் என்றால் கருவை சுற்றியுள்ள ஆடையை போன்ற ஒன்றாகும். ஜராயு என்றால் அதன்மீது சுற்றி இருக்கக்கூடிய கருப்பையாகும். கர்ப்போதகமாவது என்பது அதில் இருக்கக்கூடிய தண்ணீர் ஆகும்.அந்த பிரம்மாண்டத்தில் இருந்துதான் மலைகள், தீவுகள், சாகரங்கள், ஜோதி சக்கரங்கள், மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் முதலியோர் பிறந்தனர். இப்படி உண்டான பிரம்மாண்டத்தை கவிந்து, ஒன்றுக்கொன்று தசகுணோத்தரமான சகலமும், அக்னியும், காற்றும், ஆகாயமும் தாமச அகங்காரமும் மகத்தத்துவமாகிய சத்தாவரணங்களும் இருக்கின்றன. எப்படி தேங்காயானது நார் மட்டை ஆகியவற்றால் கவியப்பட்டிருக்கிறதோ அதுபோலவே, பிரம்மாண்டமும் சத்தாவரணங்களாலே கவியப்பட்டுள்ளது.இவ்விதமாக தோன்றிய அந்த அண்டத்தில் விஸ்வரூபமான நாராயணர், பிரமரூபியாகி, ரஜோ குணத்தை பிரதானமாக உடையவர்களாக இருக்கக்கூடிய தேவ, அசுர, கந்தர்வ மனுஷ்ய, பசு, பட்சி தாவரங்கள் ஆகியவற்றை படைத்தார்.அப்பிரமேய பராக்கிரமனும், சட்குண ஐஸ்வரிய சம்பன்னனுமான தானே சாத்வீக குணத்தை பிரதானமாகவும், லீலார்த்தமாகவும் யுகங்கள் தோறும் நானாவிதமான திவ்ய அவதாரங்களை செய்து கொண்டிருப்பேன்.மேலும் பலவிதமான கல்பாந்தர பரியந்தமும் ஜகத்தை பரிபாலனம் செய்து கொண்டும், பிரளய காலத்தில் தாமச குணத்தை பிரதானமாக உடைய ருத்திர ரூபியாகிறான்.அப்பொழுது அதிபயங்கரமாய் சராசரங்களான உலகில் தோன்றி இருக்கக்கூடிய மற்றும் உலகம் தோன்றுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய அகில பூதங்களையும் விழுங்கி, மூவுலகங்களையும் ஏகார்ணவமாக (அழித்தல்) செய்து, ஸஹஸ்ர பணாமண்டல மண்டிதனான ஆதிசேஷனாகிய படுக்கையில், சயனித்து கொண்டு பிறகு பிரளயாந்தத்தில் திரும்பவும் எழுந்திருந்து பிரமரூபியாகி, முன்போலவே, பிரபஞ்சத்தை படைத்தருள்வான்.ஷட்குண சம்பன்னனான ஜனார்த்தனன் ஒருவன், அந்தந்த சொரூபங்களில் நின்று, சிருஷ்டி ஸ்திதி சங்காரங்களை செய்வதனால் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்ற திருப்பெயர்களை பெறுகின்றான்.அந்த பகவான் தானே சிருஷ்டி கர்த்தாவாக இருந்து சராசர சரீரகனாக தன்னை தானே சிருஷ்டித்து கொள்கிறேன். தன்னால் சிருஷ்டிக்க உயிரினங்கள் யாவற்றையும் தானே காக்கின்றான். யுகங்களின் முடிவில் தானே தோன்றி யாவற்றையும் சங்கரிக்கின்றான். ஆகையால், சிருஷ்டி கர்த்தாவாகவும், சங்கார கர்த்தாவாகவும் தோற்றுகிறவர்களுக்கும், சிருஷ்டிக்கப்படுவதும் சங்கரிக்கப்படுவதுமாக தோற்றுபவைகளுக்கும் தாரதம்மியம் ஒன்றும் இல்லை.ஏனெனில் பிருத்வி, அப்பு, தேயு, வாயு ஆகாயங்களும், இந்திரியங்களும், மனமும் சகல சௌபாக்கியங்கள் நிறைந்து இருக்கக்கூடிய இந்த பிரபஞ்சங்களும் அந்த ஸ்ரீமந் நாராயணனேயாம்!இந்த பிரபஞ்சம் முழுவதும் நாராயணனின் அடக்கம் என்று கூறுவதன் காரணம் யாதெனில் சகல பூதங்களுக்கும், ஆன்மாவாகவும், எல்லாவற்றையும் தனக்கு சரீரமாக உடையவனாகையால் உடலில் தோன்றி இருக்கக்கூடிய கை, கால் முதலியவற்றின் செய்கையானது, சரீரமான ஆன்மாவுக்கு உபகாரமாக இருப்பது போல, பிரம்மாதிகள் செய்கின்ற சிருஷ்டி முதலியவை யாவும் அவனுக்கு உதவியாக இருக்கும். யாம் கூறியவை உனக்கு இன்னும் புரியவில்லை என்றால் உமக்கு புரியும் விதத்தில் மிகவும் எளிமையாகவும் கூறுகின்றேன் கேட்பாயாக.அதாவது, சேதனாசேதனங்களான சகல பிரபஞ்சங்களும், சரீரமாயிருப்பதான சொரூபமுடையவனாகையாலே பிரமாதி ரூபங்களில், படைப்பவன் அவன்! படைக்கப்படுபவனும் அவன்! காப்பவன் அவன்! காக்கப்படுவோனும் அவன்! சங்கரிக்கிறவன் அவன்! சங்கரிக்கப்படுகிறவனும் அவனே! ஆனால், தான் சர்வ சக்தனாக இருக்கும்போது, பிரம்மாதிகளை இடையில் வைப்பது ஏனெனில் அவர்களுக்கு அப்படி செய்யும்படி அவனே வரங்கொடுத்திருக்கிறான். ஆகையால் தான், மைத்ரேயரே! அந்த ஸ்ரீமகாவிஷ்ணுவே சகலவிதத்திலும் உபாசிக்கத்தக்கவராக இருக்கிறார்!
