வேள்விப் படலம் - 423
விசுவாமித்திரனும் இராமலக்குமணரும் கோமதி நதியை அடைதல்
423.
‘மானச மடுவில் தோன்றி
வருதலால். ‘’சரயு’’ என்றே
மேல் முறை அமரர் போற்றும்
விழு நதி அதனினோடும்
ஆன கோமதி வந்து எய்தும்
அரவம்அது’ என்ன. அப்பால்
போனபின். பவங்கள் தீர்க்கும்
புனித மா நதியை உற்றார்.*
மானச மடுவில் தோன்றி வருதலால் - மானசம் என்னும்
பெயருடைய மடுவிலே தோன்றிப் பெருகிவருதலால்; சரயு என்றே
மேல்முறை அமரர் போற்றும் விழுநதி - சரயு என்னும் பெயர்
கொண்டு மேலாம் முறையிலொழுகும் தேவர்கள் போற்றும்
விழுநதியாகிய; அதனினோடும் ஆன கோமதி வந்து எய்தும்
அரவம் அது என்ன - அந்த நதியுடனே கோமதி என்னும்
பெயருடைய ஆறு வந்து சேர்வதால் உண்டாகும் ஓசையே அது
என்று விசுவாமித்திர முனிவன் சொல்ல; அப்பால் போனபின்
பவங்கள் தீர்க்கும் புனித மாநதியை உற்றார் - அதற்கு
அப்புறம் சென்றபின் பிறவிப் பிணியைப் போக்க வல்ல
புனிதமான ஒரு பெரிய நதியைச் சென்று சேர்ந்தார்கள்.
மானசம் என்ற மடு பிரமனது மனத்தால் தோன்றியதென்பதல்
இப்பெயர் பெற்றது. ‘சரசு’ குளம் இதிலிருந்து தோன்றியதால் சரயு
என்று பெயர் பெற்றது. சரயுநதி விழுமிய நதியுமாம். கோமதி
மற்றொரு ஆறு. இரு நதிகளும் கூடும் இடமிது. ‘எய்தும் அரவம்’
இந்த இரண்டு ஆறுகளும் கலந்து சேர்வதால் உண்டாகும் ஒலி
என்பது பொருள். ‘புனிதமாநதி’ கௌசிகை என்னும் நதியாகும்.
‘பவங்கள்’ என்பதில் ’பவம்’ பிறப்பு. 5
