தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

தெ. பொ. மீனாட்சிசுந்தரம்

bookmark

வாழ்க்கை வரலாறு தெ. பொ. மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு, சென்னை, சிந்தாரிப்பேட்டையில் 1901-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் நாள் பொன்னுசாமி கிராமணியார் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தைக்குத் தமிழ் மீதும் தமிழ் அறிஞர்கள் மீதும் இருந்த பற்றினால், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பெயரை மகனுக்கு இட்டார். பன்மொழிப்புலவர் என்று அழைக்கப்பட்ட தெ. பொ. மீனாட்சிசுந்தரம், 20-ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களுள் ஒருவர். இவர் சமசுகிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற பல மொழிகளை அறிந்தவராய் இருந்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், வரலாறு, சமயம், ஒப்பிலக்கியம், மொழியியல் குறித்த பல கட்டுரைகளையும், நூல்களையும், திறனாய்வுகளையும் எழுதியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு வழக்கறிஞராகவும், சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் பணியாற்றிய இவர், பிறகு மொழியியலில் ஆர்வம் கொண்டு பட்டங்கள் பெற்று, பல கல்லூரிகளில் பேராசிரியராகவும், பின்னர் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும் 1966 முதல் 1971 வரை பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும், இந்திய அரசின் பத்மபூசன் விருதையும் பெற்றவர்.