மிதிலைக் காட்சிப் படலம் - 679

bookmark

தேவர்களால் தள்ளுண்ட திரிசங்குவைக்
கோசிகன் வானத்தில் நிற்குமாறு செய்தல்

தேவர்கள் தள்ளிய திரிசங்குவைக்
கௌசிகன் மேலேயே நிற்கச் செய்தல்
 
679.

‘ஆங்கு அவன் துறக்கம் எய்த.
   அமரர்கள் வெகுண்டு. “நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே?
   இரு நிலத்து இழிக!” என்ன.
தாங்கல் இல் கவிழ்வான். மற்று.
   “தாபதா! சரணம்” என்ன.
ஓங்கினன். “நில் நில்!” என்ன
   உரைத்து. உரும் ஒக்க நக்கான்.
 
ஆங்கு    - அவ்வாறு; அவன் - அவ்வரசன்; துறக்கம் எய்த -
சுவர்க்கத்தை   அடைய;   அமரர்கள்   -  (அதுகண்ட)  தேவர்கள்;
வெகுண்டு  -   சினந்து;  நீசன்   ஈங்கு   -   சண்டாளனான  நீ
அவ்வுடம்போடு இவ்விடத்தே; வந்திடுவது என்னே - வந்து சேர்வது
என்ன நீதி?; இரு நிலத்து இழிக - பூமியிலே இறங்கு வாயாக; என்ன
-  என்று  கூறித்  தள்ள; தாங்கல்  இல்  -  தன்னைத்  தாங்குவார்
இல்லாதவனாய்;  கவிழ்வான்  -  (தலைகீழாக)  விழும்  அத்திரிசங்கு;
மற்று  -  பின்பு (கோசிகனை நோக்கி); தாபதா - முனிவனே; சரணம்
என்ன  -  ‘நீயே  எனக்குப்  புகலிடம்’  என்று  ஓலமிட (அதுகேட்ட
கோசிகன்); நில்  நில் என்ன-(நிமிர்ந்து நின்று)  அந்த  இடத்தேயே
நிற்பாயாக  என்று; ஓங்கினன் உரத்து  -  உரக்கச் சொல்லி; உரும்
ஒக்க - இடி முழக்கம் போல; நக்கான் - சிரித்தான்.

சிரிப்பு:  தேவர்களின்  மீது  உள்ள  வெகுளியாலும்  எள்ளலாலும்
ஆகியது. நில்நில் - அடுக்கு விரைவு பற்றியது.                  116