தூக்கனாங்குருவி

தூக்கனாங்குருவி

bookmark

தூக்கனாங்குருவி

இக்குருவியின் உச்சந்தலை, மார்பு ஆகியவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் குருவிகள் பொதுவாக மரவண்ண நிறத்தில் இருக்கும். முட்டையிடும் பருவத்தில் ஆண், பெண் குருவிகள் இரண்டும் அடர்த்தியான பிரகாசமான மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். 

இனப்பெருக்கம் இல்லாத காலங்களில் இவை கூடு கட்டுவதில்லை. அக்காலங்களில் இவை மரப்பொந்துகள் போன்ற அடைவிடங்களில் கூடி இரவைக் கழிக்கும்.

இப்பறவைகள் முட்கள் இருக்கக்கூடிய மரங்களில் கூடுகளைக் கட்டும். 

இவை மழைக்காலத்தின் தொடக்கத்தில் கூடமைக்கத் தொடங்குகின்றன. ஆண் மட்டுமே கூடு கட்டும் பணியில் ஈடுபடும்.

கூட்டினுள் இருக்கும் முட்டைகள் வேகமாக வீசும் காற்றில் கீழே விழாமல் இருக்கும் வண்ணம், காற்றடிக்கும் திசைக்கேற்ப கூட்டின் நுழைவுவாயிலை தூக்கணாங்குருவி அமைக்கும். 

வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட தூக்கணாங்குருவியின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும், கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்நோக்கி இருக்கும். 

கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை உருவாக்குகின்றன.

இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால், வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டப்படும் 

இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை. இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை. காற்றினால் கீழே விழுவதில்லை. 

ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றன.

ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் கூடு முழுமையடையும். 

கூட்டின் உட்பகுதிகளில் பெண் குருவிகளின் விரும்பத்திற்கு ஏற்றார்போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. சில நேரங்களில் உட்கட்ட அமைப்புகளில் திருப்தியுறாத பெண் பறவைகள், தாங்களே தன் விருப்பத்திற்கு ஏற்றது போல கட்டிக்கொள்கின்றன.

ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் தூக்கணாங்குருவி ஒளியேற்றிக் கொள்கிறது.