திரு அவதாரப் படலம் - 309
பரதனும் சத்துருக்கனும்
309.
பரதனும் இளவலும். ஒருநொடி பகிராது.
இரதமும் இவுளியும் இவரினும். மறைநூல்
உரைதரு பொழுதினும். ஒழிகிலர்; எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே.
பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது-பரதனும். சத்துருக்கனும்.
ஒரு நொடிப்பொழுதேனும் பிரியாது; இரதமும் இவுழியம் இவரினும்-
தேரிலும். குதிரையின் மீதும் ஏறிச் சவாரி செய்யும் போதும்; மறை
நூல் உரைதரு பொழுதினும் -வேதம் முதலிய நூலக்ளை ஓதுகின்ற
காலத்தினும்; ஒழிகிலர் -பிரியாதவர்களாகி; எனை ஆள் வரதனும்
இளவலும் என - என்னை ஆட்கொண்டருளிய ராமபிரானையும்.
இலக்குவனையும் போல; மருவினர் - சேர்ந்திருந்தனர்.
நொடி: கை நொடிப் பொழுது. இதனை மாத்திரை என்பர்.
தொழிலாகு பெயராய். கால அளவை உணர்த்தி நின்றது. இவர்தல்:
ஏறுதல். உரைதருதல்: ஓதுதல். ஒழிகிலர்: முற்றெச்சம். ஆள்வரதன்:
வினைத்தொகை. வரதன்: வரம் தரவல்லன். இவுளி: குதிரை. பகிராது:
பிரியாது.
பரதனும். சத்துருக்கனும் தேரேறிச் சென்றாலும். குதிரைச் சவாரி
செய்தாலும் வேதம் முதலான கலைகளை ஓதினாலும் ஒரு நொடிப்
பொழுதும் பிரியாதவராகி இராமனையும். இலக்குவனையும் போலச்
சேர்ந்திருந்தனர் என்பது கருத்து. பரத. சத்துருக்கனரின் ஒட்டுறவு
கூறப்பட்டது. 128
