திரு அவதாரப் படலம் - 300
இலக்குவன் எனப் பெயரிடுதல்
300.
உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக்கொடியும் துயர் நீத்தனள்; இந்த.
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்.
‘இலக்குவன்’ என்ன. இசைத்தனன் அன்றே.
உலக்குநர் வஞ்சகர் - இனி வஞ்சர்களாகிய அரக்கர்கள்தாம்
இறப்பவர்களாவார்; உம்பரும் உய்ந்தார் - தேவர்கள் உய்வு
பெறுவார்கள்; நிலக் கொடியும் துயர் நீத்தனள் - நிலமகளும் துன்பம்
நீங்கினாள்; விலக்க அரும் மொய்ம்பின் -(இத்தகைய பேற்றை
உலகுக்குத் தரும்) நீக்க இயலாத வலிமை உடைய; இந்த விளங்கு
ஒளிநாமம் -இந்த விளங்குகின்ற ஒளியின் பெயர்; இலக்குவன் என்ன
இசைத்தனர் -இலக்குவன் என்று கூறினான்.
உலக்குநர்: அழிபவர் (உலத்தல்: அழிதல்). உம்பர்: தேவர்கள்
இடவாகு பெயர். நிலக்கொடி: நிலமகள்; கொடி: உவமை ஆகுபெயர்.
நீத்தல்: நீக்கல். மொய்ம்பு. வலிமை. இசைத்தனன்: கூறினான்.
சுமித்திரை பெற்ற பிள்ளைக்கு ‘இலக்குவன்’ என்று வசிட்டன்
பெயர் சூட்டினான் என்பது கருத்து. ல?க்ஷ்மணன் என்பதற்கு உத்தம
இலக்கணங்கள் அமையப் பெற்றவன் எனவும். கைங்கரிய
லட்சுமியோடு கூடியிருப்பவன் என்பதும் பொருள் என்பர். நிலமகள்
துயரம் நீங்குவது உறுதியாதலில் ‘நீத்தனன்’ என்றார். 119
