திரு அவதாரப் படலம் - 286

bookmark

சுமித்திரை சத்துருக்கனைப் பெறுதல்

286.

படம் கிளர் பல் தலைப் பாந்தள் ஏந்து பார்
நடம் கிளர்தர. மறை நவில நாடகம்.
மடங்கலும் மகமுமே வாழ்வின் ஓங்கிட.
விடம் கிளர் விழியினாள். மீட்டும். ஈன்றனள்.
 
படம்கிளர் பல்தலைப் பாந்தள்- படம் பொலியும்  பலதலைகளை
உடைய   பாம்பாகிய  ஆதிசேடன்;  ஏந்து  பார் நடம்  கிளர்தர -
தாங்குகின்ற இவ்வுலகம் மகிழ்ந்து கூத்தாடவும்; மறை நாடகம் நவில -
வேதமும்  அந்தக்கூத்தொலியையே செய்யவும்; விடம்கிளர் விழியினாள்
-  விடம்  போன்ற  விழியை  உடையவளான சுமித்திரை;  மடங்கலும்
மகமும்  வாழ்வின்  ஓங்கிட  -  சிங்க  ராசியும்  மக  நட்சத்திரமும்
வாழ்வில்   மகிழ்ந்தோங்கவும்;   மீட்டும்  ஈன்றனள்  -  மறுபடியும்
ஓராண்மகவைப் பெற்றாள்.

படம்கிளர்     பஃறலைப்பாந்தள்:   படங்கள்  கிளர்ந்துள்ள  பல
தலைகளையுடைய  பாம்பாகிய  ஆதிசேடன்  படம்:   பணம்   அதை
உடையதாதலின்   பாம்புக்குப்  ‘பணி’  என்பதும்  ஒரு   பெயருண்டு.
கிளர்தல்:  நெருங்கி  ஓங்குதல்.  நாடகம்:  கூத்து (நடனம்)  மடங்கல்:
சிங்கம்.   வாழ்வின்   ஓங்கிட:   வாழ்வு  சிறக்க.  ‘விடம்கிள   விழி’
பெண்களின்  கண்களை  விடத்துக்கு  ஒப்பிடுவது  கவிமரபு.  மீட்டும்:
மறுபடியும்    ஏந்துபார்:    வினைத்   தொகை.   சுமித்திரை    மக
நட்சத்திரத்தில்  சிங்க  ராசியில்  மீண்டும் ஒருபுத்திரனைப்  பெற்றாள்
என்பது கருத்து.                                          106