திரு அவதாரப் படலம் - 279

bookmark

மற்றை முனிவரும் ஆசிகூறி ஏகுதல்

279.

வாங்கிய துயருடை மன்னன். பின்னரும்.
பாங்குறு முனிவர் தாள் பழிச்சி ஏத்தல்கொண்டு.
ஓங்கிய உவகையர் ஆசியோடு எழா.
நீங்கினர்; இருந்தனன். நேமி வேந்தனே.
 
வாங்கிய   துயர் உடை மன்னன்- துயரம் நீங்கிய  மன்னனாகிய
தயரதன்;  பின்னரும்  பாங்கு உறுமுனிவர்  தாள்பழிச்சி -  பின்பு.
கலைக்கோட்டு   முனிவனைச்  சூழ்ந்திருந்த   முனிவர்களையெல்லாம்
வணங்கிப் புகழ்ந்து; ஏத்தல் கொண்டு ஓங்கிய உவகையர்- போற்றிக்
கொண்டாடியமையால் மகிழ்ச்சி கொண்ட அம்முனிவர்கள்.  ஆசியோடு
எழா   நீங்கினர் -   அரசனுக்கு   ஆசிகூறி  எழுந்து   சென்றனர்;
நேமிவேந்தன் இருந்தனன் - அத் தசரதவேந்தன் நலமே இருந்தனன். 

வாங்கியதுயர்:     நீங்கிய  துயரம். ‘பாங்குடைமுனிவர்’ என்பதற்கு
நல்லொழுக்கம்  உடைய  முனிவர்கள்  என்பதும்  பொருளாம். பாங்கு:
ஒழுக்கம்.  பழிச்சியேத்தல்:  மிகுதியாக  ஏத்துதலுமாம்.  நேமி: சக்கரம்
ஆணையாகிய  நேமி  என்பர்.  ‘பின்னரும்’  என்றது.  கலைக்கோட்டு
முனிவனை    வணங்கிய    பின்னர்    மற்ற      முனிவர்களையும்
வணங்கினான்  என்பதை  உணர்த்தும்.  எழா:   எழுந்து (செயா என்ற
வாய்பாட்டு வினைஎச்சம்).                                   99