திரு அவதாரப் படலம் - 280
மனைவிமார் வயாக்கொள்ளுதல்
280.
தெரிவையர் மூவரும். சிறிது நாள் செலீஇ.
மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால்.
பொரு அரு திரு முகம் அன்றி. பொற்பு நீடு
உருவமும். மதியமோடு ஒப்பத் தோன்றினார்.
தெரிவையார் மூவரும்- தயரதன் தேவியான மூவரும்; சிறிது நாள்
செலீஇ -சில நாட்கள் சென்ற பின்னர்; மருவிய வயாவொடு வருத்தம்
துய்த்தனர் - பொருந்திய ஆசையும் வருத்தமும் அடைந்தனர்: பொரு
அருதிருமுகம் அன்றி- ஒப்பற்ற அவர்களது அழகிய முகங்களே
அல்லாது; பொற்பு நீடு உருவமும் - அழகிய ஏனைய உறுப்புக்களும்;
மதியமோடு ஒப்பத்தோன்றினர் - சந்திரனை ஒத்திருந்தார்கள்;
தெரிவையர் -பெண்கள் (பேதை முதலிய ஐந்து பருவங்களையும்
கடந்து நடுத்தர வயதுடையவர்கள் என்பதைக் குறிப்பிடுவதாம்).
செலீஇ: செல்ல (சொல்லிசை அளபெடை). வயா: கருப்பமுற்ற
பெண்களுக்கு உண்டாகும் மசக்கை நோய் காரணமாகப் பொருள்கள்
மேல் உண்டாகு அவாவாகும். எனவே ஆசை எனப்பொருள்
கூறப்பட்டது. வருத்தம்: கருப்பத்தைத் தாங்குதலால் ஏற்படும் துன்பம்.
துய்த்தல்: அடைதல்; அனுபவித்தலுமாம். பொற்பு: அழகு.
தோன்றுதல்: விளங்குதல்.
கருப்பம் வளர. வளர கருப்பிணிகளுக்கு மேனிவெளுத்தல்
இயல்பாதலின் முகம் மட்டுமின்றி வேறு அங்கங்களும். சந்திரனை
ஒத்து வெளுத்துக் காணப்பட்டனர். ‘உருவமும்’ என்பது முகமும்
என்பதைத் தழுவிநின்றது. ‘உம்’ இறந்தது தழீஇயஎச்சஉம்மை.
திருமுகமும். உருவமும் மதியோடு ஒப்பத் தோன்றினர் என்பது
கருத்து. தசரதன் தேவியர் மூவரும் கருவுற்றனர் என்பது கூறப்பட்டது.
அடுத்த மூன்று பாடல்கள் கோசலை வயிற்றில் திருஅவதாரம்
செய்ததனைக் கூறுவதாகும். 100
