திரு அவதாரப் படலம் - 277

bookmark

தசரதன் கலைக்கோட்டு முனியை வணங்குதல்

277.

அரிய நல் தவமுடை
   வசிட்டன் ஆணையால்.
இரலை நல் சிருங்க மா
   இறைவன் தாள் தொழா.
உரிய பற்பல உரை
   பயிற்றி. ‘உய்ந்தனென்;
பெரிய நல் தவம் இனிப்
   பெறுவது யாது?’ என்றான்.
 
அரிய    நல்தவம்   உடை- (தயரதன்) அரிய நல்ல தவத்தைச்
செய்துள்ள;  வசிட்டன்  ஆணையால் - தனது குலகுருவாகிய வசிட்ட
முனிவனது  கட்டளைப்படி;  இரலை நல்சிருங்கமா  இறைவன் தாள்
தொழா  -  கலைக்கோட்டு முனிவனது பாதங்களைத் தொழுது; உரிய
பற்பல  உரை  பயிற்றி  - தக்க  பலப்பல துதிமொழிகளைத்தொழுது;
உரியனன் -உன்னால் நான் உய்வுபெற்றேன்; பெரிய நல்தவம் இனிப்
பெறுவது  யாதுஎன்றான்  -  பெரிய  நல்லதவத்தைச்  செய்து  நான்
பெறுவது இதைவிட வேறு என்ன இருக்கிறது என்று கூறினான்.

அரிய:     பிறரால்   செய்தற்கரிய   (பெயரெச்சம்). இரலை: மான்.
சிருங்கம்:  கொம்பு.  நல்மா  இறைவன்:  நல்ல  சிறந்த குரு. தொழார்:
தொழுது  (செயா  என்னும்  வாய்பாட்டு வினைஎச்சம்)  உரிய:  தகுந்த.
உரை:  துதிமொழிகள்.  பயிற்றி: சொல்லி. ‘பெறுவது யாது’  இதில் யாது
என்ற   வினா   எதிர்மறைப்  பொருள்தந்து  நின்றது.   யாதொன்றும்
இல்லை என்பது கருத்து.                                    97