திரு அவதாரப் படலம் - 276
தசரதன் அவையில்வந்து வசிட்டனை வணங்குதல்
276.
முரசுஇனம் கறங்கிட. முத்த வெண்குடை
விரசி மேல் நிழற்றிட. வேந்தர் சூழ்தர.
அரசவை அடைந்துழி. அயனும் நாண் உற
உரை செறி முனிவன் தாள் வணங்கி. ஓங்கினான்.
முரசினம் கறங்கிட - முரசும். அதற்கினமான பலவகை
வாத்தயங்களும் முழங்கவும்;முத்த வெண்குடை விரசி மேல் நிழற்றிட
- முத்து மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்கொற்றக் குடை
மேலே நிழல் தரவும்; வேந்தர் சூழ்தர - மன்னர் பலரும்
சூழ்ந்துவரவும்; அரசு அவை அடைந்துழி - தயரதன் அரசவையை
அடைந்தபோது; அயனும் நாண்உற உரை செறிமுனிவன் -
நான்முகனும் நாணும்படி பலரும் புகழும் புகழுரை பொருந்திய
முனிவனான வசிட்டனுடைய; தாள் இறைஞ்சி ஓங்கினான் -
பாதங்களை வணங்கிப் பெருமை எய்தினான்.
‘முரசினம்’ முரசும். அதன் இனமும் ஆகும். முத்த வெண்குடை
என்பதை ‘வெண்முத்தக்குடை’ என மாற்றிப்பொருள் கொள்க. விரச :
நெருங்க (வினையெச்சம்). நிழற்ற: நிழல்கொடுக்க. சூழ்தர:
‘அடைந்துழி’ இதில் ‘உழி’ காலத்தை உணர்த்தும். வேள்வியை நடத்த
வசிட்டனே காரணம் என்பதால் அனைவரும் புகழ்ந்த
புகழ்மொழிகளுக்கு உரியவன் என்பதால் ‘உரைசெறி’ என்றான்.
வசிட்டனை வணங்கிப் பெருமை எய்தினான் மன்னன் என்பதால்
‘ஓங்கினான்’ என்றான். 96
